தேனி ராஜவாய்க்காலில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மீண்டும் தொடக்கம்
தேனி ராஜவாய்க்காலில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மீண்டும் தொடங்கியது.
தேனி கொட்டக்குடி ஆற்றின் தடுப்பணையில் இருந்து கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள தாமரைக்குளம் கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் ராஜவாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியது. இதையடுத்த ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்காலை தூர்வார வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்தது. பொதுப்பணித்துறையினர் அதற்கான நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர்.
இந்தநிலையில் ராஜவாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மதுரை கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்போல் கடந்த மார்ச் மாதம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஓரிரு கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டன. அவ்வாறு இடிக்கப்பட்ட கட்டிடங்களின் கழிவுகள் அகற்றப்படாமல் வாய்க்காலுக்குள் கிடக்கின்றன. இதனால், மழைநீர் வடிந்து செல்வதிலும் சிக்கல் உருவானது.
இதற்கிடையே நேற்று மீண்டும் வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. அப்போது மதுரை சாலையோரம் 3 சிறிய கடைகளின் கட்டிடங்கள் மற்றும் ஒரு மருத்துவமனையின் சுற்றுச்சுவர் ஆகியவை இடிக்கப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்றும், இடித்து தரைமட்டமாக்கப்படும் கட்டிட கழிவுகளை வாய்க்காலுக்குள் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதேபோல் பெயரளவில் பணிகள் நடப்பதாக மக்களிடம் அதிருப்தியும் காணப்படுகிறது. எனவே, வாய்க்கால் தொடங்கும் இடத்தில் இருந்து முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.