மத்திய அரசின் கைக்கூலியாக அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது
மத்திய அரசின் கைக்கூலியாக அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
அரிமளம் தெற்கு வட்டாரம் கே.புதுப்பட்டியில் காங்கிரஸ் கட்சியின் கொடி ஏற்றும் விழாவும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. விழாவிற்கு தெற்கு மாவட்ட தலைவர் ராமசுப்புராம் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் கணேசன் முன்னிலை வகித்தாா். விழாவில் கார்த்தி சிதம்பரம் எம்.பி.கலந்து கொண்டு காங்கிரஸ் கொடியினை ஏற்றி வைத்து ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் மெகா கூட்டணிக்காக பீகார் செல்வது காலத்தின் கட்டாயம். மத்திய அரசின் கைக்கூலியாக அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது. அமலாக்கத்துறையை கலைத்து விட்டு சி.பி.ஐ.யுடன் இணைத்து விட வேண்டும். சி.பி.ஐ.க்கு விதிமுறைகள் உள்ளது, ஆனால் அமலாக்கத்துறைக்கு எந்த விதிமுறைகளும் இல்லை. முழுக்க, முழுக்க பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக இருக்கும் கட்சிகளை அச்சுறுத்தும் இயக்கமாகவே செயல்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிகிச்சை அளிப்பது என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம். வருமான வரித்துறை சோதனைக்கு தமிழக அரசிடம் அனுமதி பெறுவது என்பது நடைமுறைக்கு சாத்தியமா என தெரியவில்லை. ஆனால் பல மாநிலங்களில் நடைமுறையில் இருந்து வருகிறது. மத்திய அரசின் வீடு கட்ட வழங்கும் தொகை மிக குறைவாக உள்ளது. இத்திட்டத்தினால் பலர் கடனாளியாகிறார்கள். ஏனென்றால் செங்கல், மணல் விலை அதிகரித்து வருகிறது. அதனால் மத்திய, மாநில அரசுகள் வீடு கட்ட வழங்கும் தொகையை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி, முன்னாள் சேர்மன் ஜெயலட்சுமி, நகர தலைவர் முத்தையா, கிராம காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.