உருட்டுக்கட்டையால் தாக்கி என்ஜினீயர், தாயுடன் படுகொலை


உருட்டுக்கட்டையால் தாக்கி என்ஜினீயர், தாயுடன் படுகொலை
x

பொன்னமராவதி அருகே என்ஜினீயர், தனது தாயுடன் உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். மேலும் அவர்களது வீட்டில் இருந்து நகை, பணத்ைத அள்ளிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை

என்ஜினீயர்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி ஊராட்சி மாப்படச்சான் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி சிகப்பி ஆச்சி (வயது 76). இவர்களுக்கு அடைக்கப்பன் (58), பழனியப்பன் (54) ஆகிய 2 மகன்களும், அடைக்கம்மை (51) என்ற மகளும் உள்ளனர். இதில், மூத்த மகன் அடைக்கப்பன், சென்னையில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

2-வது மகன் பழனியப்பன், என்ஜினீயர். மேலும் பொன்னமராவதி கட்டிட பொறியாளர் சங்கத்தின் துணை தலைவராக பதவி வகித்து வந்தார். இவருடைய மனைவி உஷா (52). இவர் கரூரில் தங்கி இருந்து ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுடைய மகன் ஸ்ரீராம் (24). பழனியப்பன் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வசித்து வந்தார்.

பிரேத பரிசோதனை

இந்தநிலையில் பழனியப்பன், அவரது தாயார் சிகப்பி ஆச்சி ஆகியோர் தங்களுடைய வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் தனபாலன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிந்து இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். பின்னர் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் பழனியப்பன் தனது தாயார் சிகப்பி ஆச்சிக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமிகள் பழனியப்பன் மற்றும் அவரது தாயார் சிகப்பி ஆச்சியை கழுத்தை நெரித்தும், உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர்கள் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். பின்னர் சிகப்பி ஆச்சி கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் நகையை பறித்து சென்றனர்.

மேலும், பழனியப்பன் புதிதாக கட்டியுள்ள வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் உடைத்து சேதப்படுத்தி வீட்டில் வைத்திருந்த பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஆனால் அதன் மதிப்பு தெரியவில்லை.

5 தனிப்படைகள் அமைப்பு

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, போலீஸ் துணை சூப்பிரண்டு அப்துல் ரகுமான் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் தப்பி ஓடிய கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.பொன்னமராவதி அருகே என்ஜினீயர், தனது தயாருடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story