என்ஜினீயர் உடல் சொந்த ஊரில் தகனம்
மும்பையில் நடந்த கிரேன் விபத்தில் பலியான என்ஜினீயர் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. அவருடைய மறைவுக்கு கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
வாய்மேடு:
மும்பையில் நடந்த கிரேன் விபத்தில் பலியான என்ஜினீயர் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. அவருடைய மறைவுக்கு கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
என்ஜினீயர் பலி
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புலம் பகுதியை சேர்ந்தவர் வேதரத்தினம். பெயிண்டர். இவருடைய மகன் கண்ணன் (வயது23). தஞ்சையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் படித்த இவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பை தானேவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியில் சேர்ந்தார்.
இவர் கடந்த 31-ந் தேதி நள்ளிரவில் மராட்டிய மாநிலம் தானேவில் பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு ராட்சத கிரேன் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் கண்ணன் உள்பட 20 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
பெற்றோர் கதறல்
விபத்தில் பலியான கண்ணனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு சென்னை கொண்டு வரப்பட்டது. அவருடைய உடலை அமைச்சர் செஞ்சி மஸ்தான், உறவினர்களிடம் ஒப்படைத்தார். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக சொந்த ஊரான ஆயக்காரன்புலம் கிராமத்தில் உள்ள அவருடைய வீட்டுக்கு நேற்று காலை உடல் கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம், தாசில்தார் ஜெயசீலன், ஊராட்சி மன்ற தலைவர் ராமையன் மற்றும் உறவினர்கள், கிராம மக்கள் மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அப்போது அவருடைய பெற்றோர் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
தகனம்
கிராம மக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் அவருடைய உடல் நேற்று மதியம் அங்குள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. கிரேன் விபத்தில் என்ஜினீயர் ஒருவர் உயிரிழந்தது வேதாரண்யம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.