மார்ச் மாதம் முழுவதும் நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட வேண்டும்; ராஜா எம்.எல்.ஏ. அறிக்கை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் மாதம் முழுவதும் நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட வேண்டும் என ராஜா எம்.எல்.ஏ. தொிவித்துள்ளார்.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மார்ச் 1-ந் தேதி பிறந்தநாள் காணும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை மார்ச் மாதம் முழுவதும் நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட வேண்டும். அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்குவது, காச நோயாளிகளுக்கு உணவு வழங்குவது, ரத்ததானம் செய்வது, மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்குவது, ஏழை எளியவர்களுக்கு நலத்திட்டங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டி, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்த வேண்டும். பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குவது, தமிழக முதல்-அமைச்சரின் திறமையான ஆட்சியின் சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டங்கள், தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடத்த வேண்டும்.
மார்ச் 1-ந்தேதி காலை 9 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் முதல்-அமைச்சர் பிறந்தநாள் நிகழ்ச்சி மற்றும் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாலை 5 மணி அளவில் தேசிய தலைவர்கள் பங்கேற்கும் முதல்வர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.