பெற்ற கடனை தொழில் முனைவோர் முறையாக திருப்பி செலுத்த வேண்டும்
பெற்ற கடனை தொழில் முனைவோர் முறையாக திருப்பி செலுத்த வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெளிப்பாளையம்:
பெற்ற கடனை தொழில் முனைவோர் முறையாக திருப்பி செலுத்த வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடன் வழங்கும் நிகழ்ச்சி
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில், இணை மானிய நிதி வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில், 2 பேருக்கு இணை மானிய நிதி வங்கி கடனை வழங்கி மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-
வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படும் ஊரக பகுதிகளில் ஏற்கெனவே தொழில் செய்து வருபவர்கள், புதிதாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்களை கண்டறிந்து, தொழில் குறித்த ஆலோசனைகள் மற்றும் வணிகத் திட்டம் தயாரித்தல் போன்றவற்றை மகளிர் வாழ்வாதார சேவை மையம் மூலம் செய்து தரப்படுகிறது.
30 சதவீத மானியம்
இந்த திட்டத்தின் அடிப்படையில் 30 சதவீதம் மானியத்துடன் வங்கிகள் மூலமாக கடன் பெற்று தரப்படுகிறது. அதன் அடிப்படையில், இணை மானிய நிதி கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு வணிகத் திட்டம் மற்றும் தொழில் கடன் பெறுவதற்கு அனைத்து விதமான சான்றிதழ்கள், வணிக ஆலோசனைகள் போன்ற சேவைகள் வழங்கப்படுகிறது.
பின்னர் வட்டார மற்றும் மாவட்ட தேர்வு குழு மூலம் தொழில் முனைவோர்களுக்கு கலந்தாய்வு நடத்தி, தகுதியுள்ள நபர்களுக்கு இணை மானிய நிதி கிடைக்க பரிந்துரை செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட வங்கிகள் மூலமாக இணை மானிய நிதி கடனை பெற்று தருகிறது.
கடனை முறையாக செலுத்த வேண்டும்
கடன் பெறும் தொழில் முனைவோர்கள் தொழிலை மேம்படுத்தி, கடனை முறையாக திருப்பி செலுத்தி மீண்டும் பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் சுந்தரபாண்டியன், முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரமணி, நாகூர் இந்தியன் வங்கி மேலாளர் ராஜேஷ்கண்ணா, ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் பாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.