கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் ஈரோட்டில் நல்லசாமி பேட்டி


கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்  ஈரோட்டில் நல்லசாமி பேட்டி
x

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்

ஈரோடு

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று ஈரோட்டில் கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்க தலைவர் நல்லசாமி கூறினார்.

சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்

கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம் சார்பில், கீழ்பவானி பாசன பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.வெங்கடாச்சலம் தலைமை தாங்கினார். கீழ்பவானி விவசாயிகள் சங்க தலைவர் செ.நல்லசாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கீழ்பவானி பாசன திட்டம் ஒரு மழைநீர் அறுவடை திட்டம். நிலத்தடிநீர் செறிவூட்டுதலே இந்த திட்டத்தின் நோக்கம். கட்டப்பட்ட அணையும், வெட்டப்பட்ட கால்வாய்களும் மண்ணால் ஆனவை. விடப்படும் நீர் வீணாக கடலில் கலப்பதில்லை. பலதரப்பட்ட பாசன திட்டங்களுக்கும், கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கைக்கு மாறாக இந்த கால்வாயை கான்கிரீட் கால்வாயாக மாற்றினால் திட்டத்தின் நோக்கம் பயனற்று போகும். சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படும்.

காவிரி தீர்ப்புக்கு எதிரானது

கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி எல்லையில் பனை விதை நடவு செய்ய வேண்டும்.

கடைக்கோடி வரை கால்வாய்களை தூர்வாருவதும், கரைகளை பலப்படுத்துவதுமே நிரந்தர தீர்வை பெற்றுத்தரும். இதை நிறைவேற்றிட பெரிய தொகை தேவையில்லை.

நடப்பு ஆண்டில் கோடையில் ஏப்ரல் மாதம் 25-ந்தேதி கொடிவேரி பாசனத்திற்கு 4.65 டி.எம்.சிக்கு பதிலாக 8.5 டி.எம்.சிக்கான அரசு ஆணையை வெளியிட்டு தண்ணீர் திறந்திருப்பது காவிரி தீர்ப்புக்கு எதிரானது. தவறான நீர் நிர்வாகத்தால் இதுவரை கீழ்பவானி பாசனத்தில் 16 போகம் கடலை சாகுபடியும், 8 போகம் நெல் சாகுபடியும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் சண்முகம், கீழ்பவானி பாதுகாப்பு இயக்க அமைப்பாளர் ரவி, கீழ்பவானி பாசன சபை தலைவர் செங்கோட்டையன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story