தப்பி ஓடிய வடமாநில கைதிகள் 1½ மணி நேரத்தில் பிடிபட்டனர்
நெல்லையில் தப்பி ஓடிய வடமாநில கைதிகள் 1½ மணி நேரத்தில் பிடிபட்டனர்
நெல்லை சந்திப்பு ஸ்ரீபுரம் பஸ்நிறுத்தம் அருகே உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் வடமாநில வாலிபர்கள் 2 பேர் நேற்று முன்தினம் பணம் எடுக்க வந்தனர். அதில் ஒருவர் பணத்தை எடுக்க முயன்றபோது, மற்றொருவர் ஏ.டி.எம். எந்திரத்தை ஆப் செய்ய முயன்றார்.
அப்போது அங்கு வந்த ஏ.டி.எம். மையம் சுத்தம் செய்யும் பணியாளர்கள் அவர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் அவர்களை மடக்கிப்பிடித்தனர்.
தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீசார் அங்கு வந்து வடமாநில வாலிபர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ஹரியானா மாநிலம் பல்வல் மாவட்டத்தை சேர்ந்த பஷீர் மகன் சலீம்ஹூசைன் (வயது 25), அசன் மகன் முபத் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் நூதன முறையில் மோசடியில் ஈடுபட முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, ஏ.டி.எம். எந்திரத்தில் ஒருவர் பணம் எடுக்க முயலும்போது, மற்றொருவர் ஏ.டி.எம். எந்திரத்தை ஆப் செய்வார். அவ்வாறு செய்யும்போது பணம் வந்துவிடும். ஆனால் அவர்கள் எந்திர கோளாறு ஏற்பட்டதால் பணம் வரவில்லை என்று கூறி ஆன்லைன் புகார் பதிவு செய்து 2 நாட்களில் அந்த பணத்தை திரும்ப பெற்று விடுவார்கள் என்று தெரியவந்தது. இதுபோன்று பல ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் மோசடி செய்ததையும் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து நெல்லை சந்திப்பு குற்றப்பிரிவு போலீசார், மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சலீம் ஹூசைன், முபத் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் இரவில் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அதன்பிறகு இருவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்துவதற்காக 3 போலீசார் நேற்று காலை கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர். கோர்ட்டு முன்பு சென்றபோது கைவிலங்குடன் இருந்த அவர்கள் திடீரென போலீசாரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை விரட்டி பிடிக்க முயன்றும் முடியவில்லை.
இதனால் உடனடியாக மாநகரம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு அங்குள்ள கல்லூரி பின்புறம் மற்றும் சாந்திநகர் பகுதியில் பதுங்கி இருந்த 2 பேரையும் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். சுமார் 1½ மணி நேரத்தில் பிடிபட்ட அவர்கள் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.