பொதுப்பணித் துறையால் கட்டப்படும் புதிய கட்டிடங்களின் முகப்பு அழகாக இருக்க வேண்டும்


பொதுப்பணித் துறையால் கட்டப்படும் புதிய கட்டிடங்களின் முகப்பு அழகாக இருக்க வேண்டும்
x

பொதுப்பணித் துறையால் கட்டப்படும் புதிய கட்டிடங்களின் முகப்பு தோற்றம் அழகாக இருக்க வேண்டும் என்று என்ஜினீயர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னை,

கோவை மண்டலத்தில் பொதுப்பணித் துறையால் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு 22-ந் தேதி (நேற்று) ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்துக்கும் உடனடியாக மதிப்பீடு தயார்செய்து, நகர ஊரமைப்பு இயக்ககம் (டி.டி.சி.பி.), சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) ஆகியவற்றின் அனுமதி பெற்று பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

முகப்பு தோற்றம்

திருத்திய நிர்வாக அனுமதி (ஆர்.ஏ.எஸ்.), 10 சதவீதம் வரை சில தவிர்க்கமுடியாத இனங்களில் மட்டுமே ஏற்கப்படும். நிலம் கையகப்படுத்த காலதாமதம் ஏற்பட்டால் உடனடியாக உயர் அலுவலர்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

கல்வித்துறையின் கட்டிடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, கட்டிடங்களின் உறுதித்தன்மையைப் பொறுத்து அதை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட உரிய கருத்துருவை அரசுக்கு அனுப்ப வேண்டும். இனிமேல், புதிய கட்டிடங்கள் கட்டும்போது, முகப்பு தோற்றம் அழகானதாக, முதல்-அமைச்சர் வெளியிட்ட வடிவமைப்பின்படி இருக்க வேண்டும்.

புதிய கட்டிடம் கட்டும்போது, ஒப்புதல் அளிக்கப்பட்ட வரைபடம் 2 லட்சம் சதுரஅடிக்கு மேல் இருந்தால், சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் பெற வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட நிர்வாக என்ஜினீயர்தான் பொறுப்பேற்க வேண்டும்.

ஆய்வு

தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ.) கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளை தொடங்கும்போது, கவனத்துடன் தரத்தை உறுதி செய்ய வேண்டும். ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யும்போது, அவர்களின் திறனை ஆய்வு செய்ய வேண்டும். கோவை மண்டலத்தில் பணித்தளம் தேர்வு செய்யப்பட வேண்டிய இனங்களில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பல்வேறு துறை அமைச்சர்களின் அறிவிப்புகளுக்கான கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம், மருத்துவத் துறை பணிகள் தொடர்பாகவும் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, முதன்மை தலைமை என்ஜினீயர் ரா.விஸ்வநாத், கோவை மண்டல தலைமை என்ஜினீயர் ரா.இளஞ்செழியன் மற்றும் கோவை மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story