தொழிற்சாலை சட்ட பாதுகாப்பு வழிமுறைகளை தெரிவிக்க வேண்டும்


தொழிற்சாலை சட்ட பாதுகாப்பு வழிமுறைகளை தெரிவிக்க வேண்டும்
x

தொழிற்சாலை சட்ட பாதுகாப்பு வழிமுறைகளை தெரிவிக்க வேண்டும்

தஞ்சாவூர்

தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, தொழில் முனைவோர்களுக்கும் தொழிற்சாலை சட்டத்தில் உள்ள பாதுகாப்பு வழிமுறைகளை தெரிவிக்க வேண்டும் என்று தஞ்சையில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் பூங்குழலி கூறினார்.

விழிப்புணர்வு கூட்டம்

தஞ்சை கோட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் சார்பில் தொழிற்துறையினர் சங்க பிரதிநிதிகளுக்கான தொழிற்சாலை சட்டத்தில் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. திருவாரூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரதுறை துணை இயக்குனர் ராஜேஷ் வரவேற்றார்.

கூட்டத்தில் தஞ்சை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் பூங்குழலி கலந்து கொண்டு கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தொழில் நாகரீகத்தின் வளர்ச்சி

ஒரு இனத்தின் நாகரீக வளர்ச்சி என்பது அதன் வேளாண்மை முன்னேற்றம், வணிகம், தொழில், ஆளும் வகுப்பினரின் சிறப்பு, கலை, கட்டிடக்கலை, மேம்பட்ட அறிவியல், சட்ட முறைமை, உலோகவியல், அரசியல் கட்டமைப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட சமயம், வளர்ச்சியுள்ள எழுத்து, தொன்மம் ஆகியவைகள் காரணிகளாக எடுத்துக்கொள்ளப்படும்.

அதேபோல் தொழில் நாகரீகத்தின் வளர்ச்சி என்பது வளர்ச்சி அடைந்த தொழில், வணிகம், ஆற்றல் மிகுந்த எந்திரங்கள், தொழிலாளர் உழைப்பு, குன்றாத தொழிலாளர் நலன், பணியிட பாதுகாப்பு, பாதுகாப்பு பண்பாடு போன்றவை காரணிகளாக அமையம்.

பாதுகாப்பு பண்பாடு

இதில் பணியிட பாதுகாப்பை உள்ளடக்கிய பாதுகாப்பு பண்பாடு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு தொழிற்சாலையில் இந்த பாதுகாப்பு பண்பாட்டு தொடர்ச்சியாக, தக்க வைக்கப்பட்ட நிலையான மேன்நிலையில் இருக்கும்போது பாதுகாப்பு பண்பாடு, பாதுகாப்பு நாகரீகமாக மாறுகிறது.

அவ்வாறு மாற பாதுகாப்பான பணியிட சூழ்நிலையை உருவாக்க ஆய்வுகள், பாதுகாப்பு வகுப்புகள், விழிப்புணர்வு கூட்டங்கள் வழியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தெரிவிக்க வேண்டும்

இந்த சூழ்நிலையில் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, தொழில் முனைவோருக்கும் தொழிற்சாலை சட்டத்தில் உள்ள பாதுகாப்பு வழிமுறைகளை தெரிவிக்க வேண்டும். அந்த நோக்கத்தில் தான் அரசு இந்த கூட்டத்தை நடத்த உத்தரவிட்டு நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் திருச்சி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் சித்தார்த்தன் 'தொழிற்சாலைகள் சட்டத்தில் உள்ள பாதுகாப்பு விதிமுறைகள்' என்ற தலைப்பிலும், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள எஸ்.ஆர்.எப். நிறுவனத்தின் பொது மேலாளர் நாராயணன் 'பணியில் நடத்தை பாதுகாப்பு' என்ற தலைப்பிலும், திருமயம் பெல் துணை பொறியாளர் அம்மாசி 'பொறியியல் துறையில் விபத்து தடுப்பு' என்ற தலைப்பிலும் பேசினர்.

5 மாவட்டங்கள்

கூட்டத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் புதுக்கோட்டை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் மகேஸ்வரன் நன்றி கூறினார்.


Next Story