விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை திருட்டு


விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை திருட்டு
x

விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை திருட்டுபோனது.

பெரம்பலூர்

சின்ன வெங்காய நடவு பணியில்...

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட கே.புதூர் கிராமத்தில் உள்ள நடுத் தெருவை சேர்ந்தவர் பாண்டியன்(வயது 60). விவசாயி. இவர் தனது மனைவி ஜெயமணி, மகன் ராம்குமார், மருமகள் வனிதா ஆகியோருடன் வசித்து வருகிறார். ராம்குமார் பெரம்பலூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து பாண்டியன், ஜெயமணி, வனிதா ஆகியோர் வீட்டின் பின்புறம் உள்ள தங்களது விவசாய நிலத்துக்கு சென்று சின்ன வெங்காயம் விதை நடவு பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் மதியம் வீட்டிற்கு வந்து உணவு சாப்பிட்டுவிட்டு மீண்டும் விவசாய வேலைக்கு சென்று விட்டனர். மதியம் சுமார் 1 மணியளவில் வனிதா வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அவர் இதுகுறித்து தனது மாமனார்-மாமியாரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

13 பவுன் நகை திருட்டு

மேலும் பீரோவில் இருந்த 13 பவுன் நகை திருட்டு போயிருந்தது. இதுகுறித்து பாண்டியன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story