`குளத்தை காணவில்லை' என கலெக்டரிடம் விவசாயி புகார்
நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம், குளத்தை காணவில்லை என்று விவசாயி புகார் கூறி ஆவணங்களை காட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், வேளாண்மை இணை இயக்குனர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பேசினார்கள். அதன் விவரவம் வருமாறு:-
தண்ணீர் திறக்க வேண்டும்
பெரும்படையார்:- களக்காடு பகுதியில் வாழை ஏல மையக்கட்டிடம் கட்டும் பணியை உடனே தொடங்க வேண்டும். வன விலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க வேண்டும். பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது. இதுகுறித்து வனத்துறையுடன் இணைந்து கூட்டம் நடத்த வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறக்க வேண்டும்.
சொரிமுத்து:- மணிமுத்தாறு பிரிவு பெருங்கால் பாசனத்திற்கு முன் குருவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். அனைத்து குளங்களிலும் உள்ள மதகு, ஷட்டர்களை சரி செய்ய வேண்டும். விவசாயிகள் கொடுக்கின்ற மனுக்களுக்கு முறையாக அதிகாரிகள் பதில் கூறுவதில்லை. மனுக்களை முழுமையாக படிப்பதில்லை.
குளத்தை காணவில்லை
விவசாயி இலோசியஸ் பேசியதாவது:- கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள சிந்தான்குளத்தை காணவில்லை. இதுகுறித்து அதிகாரியிடம் கேட்டால் குளம் இருந்ததுக்கு ஆவணம் இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால், இந்த குளத்திற்கு மானூர் யூனியன் மூலம் கடந்த 2022-ம் ஆண்டு வரை மீன்பாசி ஏலமிட்டு பராமரித்து வந்தனர். 100 நாள் வேலைதிட்டத்தில் குளத்தை ஆழப்படுத்தினார்கள். தற்போது அந்த குளத்தை மூடி அழித்து விட்டனர்.
காணாமல் போன அந்த குளத்தை கண்டுபிடித்து தர வேண்டும். அந்த குளம் இருந்ததற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. இதை போல் கங்கைகொண்டான் சிறுகுளம் மற்றும் துறையூர் ஊரணிக்கு வரும் நீரோடைகளையும் மூடி அழித்து வருகின்றனர். இதனால் கங்கைகொண்டான் குளம் துறையூர் ஊரணிக்கு வரும் நீர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
நடவடிக்கை
அப்போது குளம் மீன் பாசிக்கு ஏலம் விட்டதற்கான ஆதாரங்களை, ஆவணங்களை காட்டினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு ஆதரவாக பல விவசாயிகள் பேசினார்கள். இதை கேட்ட கலெக்டர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று கூறினார்.