வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்த விவசாயி சாவு
வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.
தக்கலை:
வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.
விவசாயி
தக்கலை அருகே உள்ள தென்கரையை அடுத்த கும்பன் பாறைவிளையை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 60). இவர் வாழை விவசாயம் செய்து வந்தார். இவருக்கு நாகம் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
கிருஷ்ணன் தனது வாழை தோட்டத்தில் மரத்தில் முதிர்ந்த வாழைக்குலையை குரங்குகளிடம் இருந்து காப்பதற்காக தென்னை ஓலையில் செய்யப்பட்ட கூடையை வீட்டின் மாடியில் வைத்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று காலையில் தக்கலை பகுதியில் மழை பெய்தது. இதனால் கிருஷ்ணன் மாடியில் வைத்திருந்த வாழைக்குலை பாதுகாப்புக்காக பயன்படுத்தும் கூடை மழையில் நனையாமல் இருக்க தார்பாயால் மூடிக்கொண்டிருந்தார்.
மாடியில் இருந்து விழுந்தார்
அப்போது, திடீரென நிலைதடுமாறி மாடியில் இருந்து கிருஷ்ணன் கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த கிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைகண்ட அவரது மனைவி நாகம் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டின் மாடியில் இருந்து விவசாயி தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.