கோவில் கொடி மரத்திலிருந்து தவறி விழுந்து விவசாயி சாவு
கோவில் கொடி மரத்திலிருந்து தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள சித்தளி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 46). விவசாயி. இவர் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு அதே ஊரில் உள்ள பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி சீனிவாசன் நேற்று கோவிலுக்கு வந்து கோவிலை சுத்தம் செய்தும், கோவிலின் கொடி மரத்தில் ஏணியை சாய்த்து வைத்து அதன் மீது ஏறி, கொடி மரத்திற்கு எண்ணெய்யை தடவி உள்ளார். அப்போது நிலை தடுமாறி எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். கீழே விழுத்த சீனிவாசனுக்கு தலையின் பின்பக்க மண்டை பலமாக அடிபட்டது. பின்னர் சிறிது நேரத்தில் சீனிவாசன் துடி துடிக்க சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீனிவாசனின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சீனிவாசனின் மனைவி ரேவதி கொடுத்த புகாரின் பேரில், மருவத்தூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தலையில் அடிபட்டு இறந்து போன சீனிவாசனுக்கு ஆர்த்தி(17), மகாலட்சுமி(12) என 2 மகள்களும், கிருஷ்ணாகாந்தன் (14) என்ற மகனும் உள்ளனர்.