குடிசை விழுந்து விவசாயி பலி


குடிசை விழுந்து விவசாயி பலி
x
சேலம்

தேவூர்:-

தேவூர், எடப்பாடி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சூறைக்காற்று வீசியதில் குடிசை விழுந்து விவசாயி பலியானார். மின்னல் தாக்கியதில் தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன.

பலத்த மழை

சேலம் மாவட்டம் தேவூர், எடப்பாடி உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று லேசானது முதல் மிதமான மழை பெய்தது. அப்போது பலத்த காற்று வீசியது. இதில் பெரும்பாலான இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

அரசிராமணி கல்லம்பாளையம் மாமரத்துகாடு பகுதியை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் (வயது 56). இவருடைய மனைவி பழனியம்மாள். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். 1 மகள், 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஆறுமுகம், கல்லம்பாளையம் மாமரத்துகாடு பகுதியில் ஒலை குடிசையில் தனியாக வசித்து வந்தார். நேற்று ஆடுகளை மேய்த்து விட்டு மாலையில் ஓலை குடிசையில் கயிற்று கட்டிலில் அமர்ந்து உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

பரிதாப சாவு

திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. பலத்த சூறைக்காற்றினால் குடிசை வீட்டின் தூண்கள் சாய்ந்து விழுந்தன. ஓலை குடிசை காற்றில் விழுந்தது. இதில் விவசாயி ஆறுமுகம் குடிசைக்குள் சிக்கி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடன் பேசிக்கொண்டிருந்த உறவுக்கார பெண்கள் 2 பேர், ஒரு சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தகவல் அறிந்த தேவூர் வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி, அரசிராமணி கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் அப்பு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். குடிசை விழுந்து விவசாயி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.

எடப்பாடி

எடப்பாடி பகுதிகளில் நேற்று பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பிரதான சாலைகளில் மழைநீர் ஆறு போல் ஓடியதால் வாகன ஓட்டிகள் ஊர்ந்து சென்றன. பலத்த சூறைக்காற்றால் நகரின் பல்வேறு பகுதிகளில் நீண்ட நேர மின் தடை ஏற்பட்டது.

மேலும் அரசிராமணி, குள்ளம்பட்டி, கல்லம்பாளையம் பகுதிகளில் சூறைக்காற்றுக்கு ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. அக்கரைக்காடு பகுதியில் சுப்பிரமணி என்பவரின் விவசாய தோட்டத்தில் தென்னை மரங்கள் மீது மின்னல் தாக்கியது. இதில் தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

மரங்கள் சாய்ந்தன

ஓமலூர் பகுதிகளான தீவட்டிப்பட்டி, பொம்மிடி ரோட்டில் சாலையோரம் இருந்த புளிய மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. அதன் கிளைகள் சாலையில் விழுந்ததால் அந்த பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

காடையாம்பட்டி அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் மீது புளியமரம் சாய்ந்தது. இதனால் சுற்றுச்சுவர் சேதமடைந்ததுடன், மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. சுற்றுச்சுவர் மீது விழுந்த மரத்தை அகற்றும் பணி மற்றும் மின்கம்பிகள் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.


Next Story