கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த விவசாயி மயங்கி விழுந்ததால் பரபரப்பு
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த விவசாயி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த விவசாயி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மானூர் அருகே உள்ள லட்சுமியாபுரத்தை சேர்ந்தவர் இளையராஜா (வயது 32). விவசாயியான இவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அந்த மனுவில், எங்கள் பகுதியில் ஒரு ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளேன். நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் காட்டுப்பன்றிகள் புகுந்து அதை நாசம் செய்துள்ளன. இதற்கு காப்பீட்டுத்தொகை கேட்டபோது மக்காச்சோளம் பயிருக்கு காப்பீடு கிடையாது என தெரிவித்தனர். எனவே வாழ்வாதாரம் கருதி நிவாரண உதவி வழங்க வேண்டும். வனத்திலிருந்து காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்குள் வருவதை தடுத்து நிறுத்த வேண்டும், என்று கூறியுள்ளார்.
மயங்கி விழுந்தார்
இளையராஜா மனு கொடுத்து விட்டு, வெளியே வந்த போது திடீரென கலெக்டர் அலுவலகத்தின் வாசலில் மயங்கி கீழே விழுந்தார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தண்ணீர் தெளித்து முதலுதவி அளித்தனர்.
பள்ளி தரம் உயர்த்த வேண்டும்
குறைதீர்க்கும் கூட்டத்தில், இந்து வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் கொடுத்துள்ள மனுவில், 1, 2, 13, 14, 54 ஆகிய வார்டுகளை கொண்ட தச்சநல்லூர் மண்டலத்தில் 25 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் இவர்கள் நலிவுற்றவர்கள். இங்கு ஒரே ஒரு அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. அதில் 300 குழந்தைகள் படித்து வருகிறார்கள். இவர்கள் 6-ம் வகுப்பிற்கு செல்ல வேண்டும் என்றால் டவுன் கல்லணை பள்ளிக்கு தான் செல்ல வேண்டும். ஆனால் அங்கு 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவிகள் படித்து வருவதால் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே எங்கள் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக உயர்த்த வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
பாசன வசதி
ராதாபுரம் துலுக்கர்பட்டியை சேர்ந்த விவசாய சங்கத்தினர் கொடுத்த மனுவில், ராதாபுரம் வட்டம், நம்பியாறு, மயிலாப்புதூர், அணைக்கட்டு, ஆனைகுளம் கால்வாய் மூலம் துலுக்கர்பட்டி கிராமத்தில் 130 ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது.
தற்போது குறைந்த அளவே தண்ணீர் உள்ளதால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறப்பட்டிருந்தது.
மணிமுத்தாறு அணை
அம்பை தாலுகா பனையங்குறிச்சி, பாரதிநகர், புதுக்கிராமம் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தங்கள் ஊர் அருகே உள்ள கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று மனு கொடுத்தனர்.
மூைலக்கரைப்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் கொடுத்த மனுவில், நாங்குநேரி, திசையன்விளை தாலுகா மக்களின் விவசாய பணிகளுக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் மணிமுத்தாறு அணையில் இருந்து 3-வது, 4-வது ரீச்களுக்கு உடனே தண்ணீர் திறந்து விட வேண்டும், என்று கூறியுள்ளார்.
ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள்
நெல்லை மாவட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 6-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்களை இயக்க வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் சேவையில் தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
இந்து மகாசபா
இதேபோல் அகிலபாரத இந்து மகா சபா அமைப்பினர் கொடுத்த மனுவில், நெல்லை மாவட்டத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறப்பட்டுள்ளது.