நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படாதை கண்டித்து உழவர் உற்பத்தியாளர் குழுவினர் காத்திருப்பு போராட்டம்
நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படாதை கண்டித்து ழவர் உற்பத்தியாளர் குழுவினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் பரனூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த மாதம் 18-ந்தேதி தொடங்கப்பட்டது. ஆனால் தொடங்கிய நாள் முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படாமல் உள்ளது. இதனால் பரனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய முடியாமல் அவதியடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்படாமல் இருந்து வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுவினருடன் இணைந்து நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்ட இடத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படாதை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீசார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் யுவராஜ் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட போராட்ட குழுவை சேர்ந்த தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் வேல்மாறன், உழவர் உற்பத்தியாளர் குழுவை சேர்ந்த லோகநாதன் மற்றும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையேற்ற அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.