குறைதீர்வு கூட்டத்தில் விவசாயி தற்கொலை செய்து கொள்ள முயன்றதால் பரபரப்பு


குறைதீர்வு கூட்டத்தில் விவசாயி தற்கொலை செய்து கொள்ள முயன்றதால் பரபரப்பு
x

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயி தற்கொலை செய்து கொள்ள முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் திறக்க வலியுறுத்தி நல்லூர் ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் மனு அளித்தனர். விவசாயி தற்கொலை செய்து கொள்ள முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.

இதில் திருவண்ணாமலை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு வீட்டுமனை பட்டா, கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கினார். மேலும் அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து கடந்த வாரங்களில் பெற்ற மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

தற்கொலைக்கு முயற்சி

கடந்த வார மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தின் போது 2 பேர் தீக்குளிக்க முயற்சி செய்தனர். அதனைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மனு அளிக்க வந்த பொதுமக்களை போலீசார் சோதனை செய்த பின்னரே கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் செல்ல அனுமதித்தனர்.

வெம்பாக்கம் தாலுகா எடப்பாளையம் பகுதியை சேர்ந்த துளசிப்பிள்ளை என்ற விவசாயி, கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் எதிரில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், கடந்த 2015-ம் ஆண்டு வெம்பாக்கம் கூட்டுறவு கடன் சங்கத்தில் 23 பவுன் நகை அடமானம் வைத்ததாகவும், 2017-ம் ஆண்டு நகைக்கடனை புதுப்பிப்பதற்காக அழைப்பு விடுத்துள்ளனர்.

அவர் அங்கு சென்று பார்த்தபோது 23 பவுன் நகையில் 15 பவுன் நகை மட்டுமே கணக்கில் காட்டி புதுப்பிக்க கூறியுள்ளனர். மீதமுள்ள 8 பவுன் நகை குறித்து கேட்டதற்கு வங்கியில் முறையான பதில் அளிக்கவில்லை.

தனது நகையை மீட்டு தரக்கோரி கடந்த 2017-ம் ஆண்டு முதல் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தற்கொலைக்கு முயன்றதாக கூறினார்.

இதையடுத்து அவரை போலீசார் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

நேரடி நெல் கொள்முதல் நிலையம்

கூட்டத்தில் வந்தவாசி தாலுகா தெள்ளார் ஒன்றியத்தை சேர்ந்த நல்லூர் ஊராட்சி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

நல்லூர் ஊராட்சியில் 1000-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் நிலங்களில் விளைவிக்கக் கூடிய நெற்பயிர்களை நல்லூரில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் வினியோகம் செய்து வந்தனர்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நல்லூர் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டது.

இதனால் கொட்டம்குப்பம், பெரியங்குப்பம், ராமசந்திரம், செய்யாறு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நெல் வினியோகத்திற்கு மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, மீண்டும் நல்லூரில் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story