மின்வேலியில் சிக்கி விவசாயி பலி
ஊத்துமலை அருகே, காட்டுப்பன்றிகள் வருவதை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட மின்ே்வலியில் சிக்கி விவசாயி இறந்தார். அவருடைய உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து பக்கத்து தோட்டத்துக்காரர் கைது செய்யப்பட்டார்.
ஆலங்குளம்:
ஊத்துமலை அருகே, காட்டுப்பன்றிகள் வருவதை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட மின்ே்வலியில் சிக்கி விவசாயி இறந்தார். அவருடைய உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து பக்கத்து தோட்டத்துக்காரர் கைது செய்யப்பட்டார்.
விவசாயி
தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே வீ.கே. புதூர் தாலுகா கீழக்கலங்கல் பேட்டை தெருவை சேர்ந்த மோகன் மகன் கஜேந்திரன் (வயது 42), லோடு ஆட்டோ டிரைவர். விவசாயமும் செய்து வந்தார்.
இவர் நேற்று அதிகாலை 5 மணி அளவில் கீழக்கலங்கல் கிராமத்திற்கு கிழக்கே அமைந்துள்ள வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார்.
மின்சாரம் தாக்கி பலி
பின்னர் காலை 8 மணி ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து அவருடைய செல்போனுக்கு அழைத்தனர். ஆனால் பதில் வரவில்லை. இதைத்தொடர்ந்து அவருடைய உறவினர்கள் வயலுக்கு சென்று தேடினர்.
அப்போது இவரது வயலுக்கு அருகில் உள்ள ஆர்.நவநீதகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் பெருமாள் என்பவருடைய வயலில் காட்டுப்பன்றிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள மின்வேலியில் சிக்கி அவர் இறந்து கிடந்தார். இதை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மறியல் போராட்டம்
இதுகுறித்து மின்வாரியத்திற்கும், ஊத்துமலை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதந்திரதேவி தலைமையிலான போலீசார், கஜேந்திரன் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க முயற்சி செய்தனர். இதை அவருடைய உறவினர்கள் தடுத்தனர்.
சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைத்து, கஜேந்திரனை கொலை செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும், இறந்த கஜேந்திரன் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனக் கூறியும் மறியல் செய்தனர்.
கைது
இதனைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென்காசி தொகுதி எம்.எல்.ஏ. பழனி நாடார், ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பெருமாள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
கஜேந்திரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் ஊத்துமலை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.