விவசாயி சரமாரி வெட்டிக்கொலை
கிருஷ்ணகிரி அருகே நிலத்தகராறில் விவசாயி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தந்தை, மகன்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி அருகே நிலத்தகராறில் விவசாயி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தந்தை, மகன்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
விவசாயி
கிருஷ்ணகிரி மாவட்டம் சுண்டேக்குப்பம் அருகே உள்ள கீழாண்டி கொட்டாயை சேர்ந்தவர் பூவன். இவருக்கு கோவிந்தம்மாள், பச்சையம்மாள் ஆகிய 2 மனைவிகள். கோவிந்தம்மாளின் மகன் ஜெயராமன் (வயது45). பச்சையம்மாளின் மகன் பழனி (48). விவசாயி. தந்தையின் நிலத்தை பிரித்துக் கொள்வது தொடர்பாக ஜெயராமன், பழனி ஆகியோருக்கு இடையே தகராறு இருந்து வந்தது.
இது தொடர்பாக காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது. நேற்று காலை பழனி கீழாண்டிகொட்டாயில் உள்ள கொல்லாகுடி அம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அவரை ஜெயராமன் மற்றும் அவரது மகன்கள் சதீஷ் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர்.
வெட்டிக்கொலை
அப்போது திடீரென்று அவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் பழனியை சரமாரியாக வெட்டினார்கள். இதில் பழனி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பழனி கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர் அங்கு ஓடி வந்து உடலை பார்த்து கதறி அழுதது உருக்கமாக இருந்தது.
இந்த கொலை குறித்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் ேபாலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்ட பழனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் பேச்சுவார்த்தை
இதற்கிடையே பழனியின் கொலையில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவரது குடும்பத்தினர், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு, துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், சரவணன் உள்ளிட்டோர் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
போலீசார் அவர்களிடம் குற்றவாளிகளை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தை, மகன்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே நிலத்தகராறில் விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.