விவசாயிக்கு சாகும்வரை சிறை தண்டனை


விவசாயிக்கு சாகும்வரை சிறை தண்டனை
x

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் விவசாயிக்கு சாகும்வரை கடுங்காவல் சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.

பெரம்பலூர்

6 வயது சிறுமி

பெரம்பலூர் மாவட்டம், நெடுவாசல் நடுத்தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 50). விவசாயி. இவர் கடந்த 30.11.2020 அன்று தனக்கு சொந்தமான டிராக்டரை எடுத்து கொண்டு நெடுவாசல்-பெரம்பலூர் சாலையில் உள்ள ஒரு வயலுக்கு உழவு பணிக்கு சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 6 வயதுடைய 1-ம் வகுப்பு படித்த சிறுமியை டிராக்டரில் அழைத்துக்கொண்டு சென்று அருகே உள்ள சோளக்காட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.

இது குறித்து சிறுமியின் தாய் மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் அப்போதைய பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார். மேலும் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தற்போது ஜாமீனில் வெளியே வந்தார். மேலும் இது தொடர்பான வழக்கு பெரம்பலூரில் உள்ள மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.

சாகும்வரை கடுங்காவல் சிறை தண்டனை

நேற்று மதியம் இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தது. மகிளா கோர்ட்டு அமர்வு நீதிபதி முத்துகுமரவேல் தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சரவணனுக்கு இயற்கையாக மரணம் ஏற்படும் (சாகும்) வரை கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுந்தர்ராஜன் ஆஜராகி வாதாடினார். இதையடுத்து சரவணனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சரவணனுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story