திண்டிவனம் அருகே நாட்டுவெடி வெடித்து விவசாயி படுகாயம்
திண்டிவனம் அருகே நாட்டுவெடி வெடித்து விவசாயி பலத்த காயமடைந்தார்.
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த அகூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபால் மகன் ராமு (வயது 48), விவசாயி. இவர் அதேஊரில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான விளை நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். மேலும் வயலில் சாகுபடி செய்துள்ள பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றி, கொக்கு உள்ளிட்டவைகளை விரட்டுவதற்காக நாட்டு வெடிகளை வாங்கி வீட்டில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை ராமு வீட்டில் இருந்தார். அப்போது நாட்டு வெடிகள் திடீரென வெடித்து சிதறின. இதில் ராமுவுக்கு கால்கள், கைகள், முகம் போன்ற உடல் பகுதிகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டு, வலியால் அலறித்துடித்தார். இதைகேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் ராமுவை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளிமேடுபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து நாட்டு வெடி எப்படி வெடித்தது என விசாரணை நடத்தி வருகிறார்கள். நாட்டு வெடிகள் வெடித்து விவசாயி பலத்த காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.