இறந்த உடலை அடக்கம் செய்ய ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்லும் அவலம்


இறந்த உடலை அடக்கம் செய்ய ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்லும் அவலம்
x

பருத்தி மேனி குப்பம் கிராமத்தில் இறந்த உடலை அடக்கம் செய்ய ஆபத்தான முறையில் இடுப்பளவு தண்ணீரில் ஆற்றை பொதுமக்கள் கடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர்

வெள்ளப்பெருக்கு

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் தும்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த பருத்தி மேனி குப்பம் கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராம மக்களுக்கு என்று தனியாக சுடுகாடு இல்லை என்று கூறப்படுகிறது. இக்கிராமத்தில் இறந்த உடல்களை ஆரணி ஆற்றை கடந்து சுமார் ஒரு கிலோமீட்டர் நடந்து சென்று கீழ் மாளிகை பட்டு கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆரணி ஆற்றில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் காலகட்டங்களில் உயிரை பணயம் வைத்து ஆற்று நீரை கடந்து செல்லும் நிலை இருந்து வருகிறது.

சுடுகாடு அமைக்க...

இந்நிலையில், நேற்று முன்தினம் கிராமத்தைச் சேர்ந்த மோகனா (வயது 55) என்பவரது உடலை பருத்தி மேனி குப்பம் கிராம மக்கள் ஆரணி ஆற்றில் இடுப்பு அளவு தண்ணீரில் கடந்து சென்று கீழ் மாளிகை பட்டு கிராமத்தில் அடக்கம் செய்தனர். எனவே பருத்தி மேனி குப்பம் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சுடுகாடு ஒன்று அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் பல ஆண்டு காலமாக வட்டாட்சியர், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டோருக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

பொதுமக்கள் கோரிக்கை

இந்நிலையில், இப்பகுதி மக்களின் மிக முக்கிய தேவையான சுடுகாடு வசதியை செய்து தர ஊராட்சி மன்ற தலைவர் மாலா, ஒன்றிய கவுன்சிலர் புஷ்ப முருகன், மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராசன் ஆகியோர் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story