கடலூர் அருகே 11 மாத குழந்தையை குடிபோதையில் பிடுங்கிச் சென்ற தந்தையால் பரபரப்பு போலீசார் மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்
கடலூர் அருகே 11 மாத குழந்தையை குடிபோதையில் பிடுங்கிச் சென்ற தந்தையால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லிக்குப்பம்,
புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் மனைவி நாகலட்சுமி (வயது 21). இவர்களுக்கு 11 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக நாகலட்சுமி தனது கைக்குழந்தையுடன் கடலூர் அடுத்த பெரியகாட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று நாகலட்சுமியின் தங்கை 11 மாத குழந்தையை வைத்திருந்தாா். அப்போது அங்கு குடிபோதையில் வந்த லோகநாதன் தனது குழந்தையை வலுக்கட்டாயமாக பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இதுபற்றி அறிந்த நாகலட்சுமி லேடிஸ் பர்ஸ்ட் காவல் உதவி எண்ணை தொடர்பு கொண்டு தனது கணவரிடம் இருந்து குழந்தையை மீட்டு தருமாறு புகார் அளித்தார். அதன்அடிப்படையில் ரெட்டிச்சாவடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் உடனடியாக அரியாங்குப்பம் விரைந்து சென்று லோகநாதனிடம் இருந்த கைக்குழந்தையை மீட்டு நாகலட்சுமியிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து லோகநாதனிடம் இது போன்ற நடவடிக்கையில் மீண்டும் ஈடுபட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கடுமையாக எச்சரிக்கை விடுத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.