கிராமங்களில் ஹெத்தையம்மன் பண்டிகை கோலாகலம்
கோத்தகிரி அருகே இருப்புக்கல், காத்துக்குளி, கேர்பன் கிராமங்களில் ஹெத்தையம்மன் பண்டிகை கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே இருப்புக்கல், காத்துக்குளி, கேர்பன் கிராமங்களில் ஹெத்தையம்மன் பண்டிகை கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஹெத்தையம்மன் பண்டிகை
நீலகிரி மாவட்டத்தில் அட்டி என்று அழைக்கப்படும் கிராமங்களில் படுகர் இன மக்கள் தொதநாடு, பொரங்காடு, மேற்கு நாடு, குந்தை சீமை என 4 சீமைகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களது குல தெய்வமான ஹெத்தையம்மன் பண்டிகையை ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி நடப்பாண்டில் பண்டிகை கடந்த 2-ந் தேதி தொடங்கியது.
இதையொட்டி கோத்தகிரி அருகே பேரகணி ஹெத்தையம்மன் கோவிலுக்கு மாவட்டம் முழுவதும் இருந்து கடந்த 4-ந் தேதி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுகர் இன மக்கள் பாரம்பரிய உடையணிந்து, காலில் செருப்பு அணியாமல், இசைக்கருவிகள் முழங்க ஆடல் பாடல்களுடன் வாகனங்களில் ஹெத்தையம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.
வழியனுப்பும் நிகழ்ச்சி
இந்த பண்டிகையின் மற்றொரு நிகழ்வாக நேற்று பேரகணி ஹெத்தையம்மனை இருப்புக்கல், காத்துக்குளி, கேர்பன் கிராமங்களுக்கு அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி இந்த கிராமங்களில் நேற்று ஹெத்தையம்மன் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் நடந்து சென்று பண்டிகையில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இருப்புக்கல் ஹாடா பகுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று மாலை 4 மணி முதல் கேர்பன் அருகே உள்ள நட்டக்கல் முருகன் கோவிலில் அம்மனை மீண்டும் பேரகணிக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. பண்டிகையையொட்டி இந்த 3 கிராமங்களும் விழா கோலம் பூண்டு, மக்கள் வெள்ளத்தில் நிறைந்து காணப்பட்டது.