அண்ணாமலையின் முதல் கட்ட நடைபயணம் இன்றுடன் நிறைவு


அண்ணாமலையின் முதல் கட்ட நடைபயணம் இன்றுடன் நிறைவு
x

அண்ணாமலையின் முதல் கட்ட நடைபயணம் இன்றுடன் நிறைவடைகிறது. முதல் கட்டத்தில் 41 சட்டமன்ற தொகுதிகளில் 22 நாட்கள் அவர் மக்களை சந்தித்திருக்கிறார். 2-ம் கட்ட நடை பயணத்தை ஆலங்குளத்தில் அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்குகிறார்.

சென்னை,

மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும், ஊழலுக்கு எதிராகவும் 'என் மண் என் மக்கள்' என்ற தலைப்பில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடை பயணத்தை ராமேசுவரத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார். 22-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) நெல்லையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி பூபேந்திர யாதவ் கலந்து கொள்கிறார்.

2-ம் கட்ட பயணம்

நெல்லையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தோடு, அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தின் முதல் கட்டத்தை நிறைவு செய்கிறார். இதைத்தொடர்ந்து சில நாட்கள் கட்சி பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்.

அதன் பின்னர் அடுத்த மாதம் (செப்டம்பர்) 3-ந்தேதியில் இருந்து, தனது நடை பயணத்தின் 2-ம் கட்டத்தை தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து தொடங்குகிறார். தொடர்ந்து தென்காசி செல்கிறார்.

4-ந்தேதி கடையநல்லூர், வாசுதேவநல்லூர், 5-ந்தேதி ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், 6-ந்தேதி சங்கரன்கோவில், 7-ந்தேதி உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, 8-ந்தேதி கம்பம், போடிநாயக்கனூர், 9-ந்தேதி பெரியகுளம், 12-ந்தேதி நிலக்கோட்டை, 13-ந்தேதி நத்தம், திண்டுக்கல், 14-ந்தேதி ஆத்தூர், ஒட்டன்சத்திரம், 15-ந்தேதி கொடைக்கானல், 16-ந்தேதி பழனியில் நடைபயணம் செல்கிறார்.

வரவேற்பு-எழுச்சி

19-ந்தேதியன்று மடத்துக்குளம், வால்பாறை, 20-ந்தேதி உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, 21-ந்தேதி கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், 22-ந்தேதி சூலூர், கவுண்டம்பாளையம், 23-ந்தேதி கோவை வடக்கு மற்றும் தெற்கு, 24-ந்தேதி கூடலூர், ஊட்டி, 25-ந்தேதி குன்னூர், மேட்டுப்பாளையம், 26-ந்தேதி பவானிசாகர், அவினாசி, 27-ந்தேதி சிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபயணம் செல்ல இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் கட்டத்தில் 22 நாட்களில் 41 சட்டமன்ற தொகுதிகளில் அண்ணாமலை மேற்கொண்ட நடைபயணத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு மற்றும் எழுச்சி உள்ளதாகவும், நடைபயணம் நடைபெற உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story