வங்க கடலில் சூறாவளி காற்று எதிரொலி: கடலூரில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை
வங்க கடலில் சூறாவளி காற்று வீசும் நிலையில், கடலூரில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
கடலூர் முதுநகர்,
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த பருவமழை காலத்தின் முதல் 2 மழைப்பொழிவுகள் எதிர்பார்த்த மழையை கொடுத்த நிலையில், 3-வது மழைப்பொழிவு ஏமாற்றத்தை தந்ததோடு, அதன் பின்னர் மழைக்கான வாய்ப்பும் குறைந்திருந்தது.
இதற்கிடையே கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், இலங்கையை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும், தமிழக கடலோர பகுதியில் மோசமான வானிலை நிலவி வருகிறது. மேலும் வங்க கடலில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீச கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
எச்சரிக்கை
இதன் எதிரொலியாக, கடலூர் துறை முகத்தில் இருந்து அனைத்து வகையான விசைப்படகு மற்றும் பைபர் படகுகள் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை, கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
வெறிச்சோடிய துறைமுகம்
அதன்படி, கடலூர் துறைமுகத்தில் இருந்து தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, சோணங்குப்பம், அக்கரைகோரி, சொத்திகுப்பம், ராசாபேட்டை, சித்திரப்பேட்டை, உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் தங்களது படகுகளை கடலூர் துறைமுகத்தில், பாதுகாப்பாக கயிறு கட்டி நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடலூர் துறைமுக பகுதி நேற்று மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.