கூடுதாழையில் மீனவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது
கூடுதாழையில் 19 நாளாக நடைபெற்று வந்த மீனவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
திசையன்விளை:
கூடுதாழையில் 19 நாளாக நடைபெற்று வந்த மீனவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
19-வது நாள் போராட்டம்
நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள கூடுதாழை மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி கடந்த 11-ந் தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் தினமும் மனிதசங்கிலி, கடலில் இறங்கி போராட்டம் என்று பல்வேறு வகையான போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று 19-வது நாளாக கடற்கரையில் அமைக்கப்பட்டு உள்ள பந்தலில் போராட்ட குழு தலைவர் ரொசிங்டன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்து.
பேச்சுவார்த்தை
மாலையில் போராட்ட பந்தலில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. மாநில மீனவர் அணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் முன்னிலை வகித்தார். பங்குதந்தை வில்லியம் வரவேற்று பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் பேசுகையில், "கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்க சபாநாயகர் அப்பாவு தீவிர முயற்சி செய்துவருகிறார். சென்னையில் மீன்வளத்துறை, வனத்துறை பொதுப்பணித்துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை அழைத்து தூண்டில் வளைவு அமைப்பதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். வருகிற 31-ந் தேதிக்குள் அதற்கான ஆணையை பெற்று விடுவதாக உறுதியளித்துள்ளார். 3 மாதத்திற்குள் தூண்டில் வளைவு அமைக்கும் பணி தொடங்கும்" என்றார். இதையடுத்து இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.