மீன்பிடி தடைக்காலத்தை மாற்றி அமைக்க வேண்டும்
அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மீன்பிடி தடைக்காலத்தை அமல்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் சங்கத்தினர் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதுகுறித்து தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த மீன் வியாபாரிகள், பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த கருத்துகள் வருமாறு:-
கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டு தோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தை அரசு அறிவிக்கிறது. நடப்பாண்டு கடந்த ஏப்ரல் 15-ந்தேதியில் இருந்து வருகிற 14-ந் தேதி வரை அமலில் உள்ளது. இந்த காலக்கட்டத்தில் 240 குதிரை திறன் கொண்ட விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என அரசு அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரையுள்ள பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. அவற்றில் 590 மீனவ கிராமங்களில் இருந்து ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க தற்போது தடை உள்ளது. மீதம் உள்ள சில கிராமங்கள் மேற்கு கடற்கரையில் வருவதால் அவர்களுக்கு மின்பிடி தடைக்காலம் கிடையாது. தமிழகத்தில் உள்ள மீன்பிடி தடைக்காலம் மீனவர்களுக்கும், மீன்களுக்கும் பொருத்தமாக இல்லை என்பதால் அரபிக் கடல் பகுதிகளில் உள்ள மாநிலங்களில் இருப்பது போன்று அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மீன்பிடி தடைக்காலத்தை அமல்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் சங்கத்தினர் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த மீன் வியாபாரிகள், பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த கருத்துகள் வருமாறு:-
மீன்பிடி தடைக்காலம்
தேனி என்.ஆர்.டி. நகரில் மீன் வியாபாரம் செய்யும் விக்னேஷ் கூறும்போது, 'ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறை காலம் என்பதால் வீடுகளுக்கு உறவினர்கள் பலரும் வருவார்கள். பள்ளிக் குழந்தைகளும் விடுமுறையில் வீட்டில் பொழுதை கழிப்பார்கள். இந்த காலகட்டங்களில் வாரம் ஒருமுறை இறைச்சி எடுப்பவர்கள் கூட மூன்று, நான்கு நாட்களுக்கு இறைச்சி எடுத்து சமையல் செய்வது வழக்கம். இந்த விடுமுறை காலங்களில் மீன் விற்பனை அதிகளவில் இருக்கும். இதே காலங்களில் தான் மீன்பிடி தடைக்காலமும் வருவதால் கடல் மீன்கள் வரத்து குறைவாக இருக்கும். இதனால் கடல் மீன்களின் விலை அதிகரிக்கிறது. மற்ற காலங்களில் கொள்முதல் விலை, போக்குவரத்து செலவுகள் போக ஓரளவு லாபம் கிடைக்கும்.
ஆனால் மே மாத காலகட்டத்தில் மீன்கள் கொள்முதல் விலையே அதிகரிப்பதால் லாபத்தை கணக்கிட்டு விற்பனை செய்ய முயன்றால் அதிக விலை இருப்பதாக கூறி மக்கள் வாங்குவதை குறைத்துக் கொள்கின்றனர். இதனால் லாபமின்றி கொள்முதல் விலையோடு போக்குவரத்து செலவை மட்டும் சேர்த்து விற்பனை செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. அவ்வாறு விற்றால் கூட மக்கள் அதிக விலை இருப்பதாக கூறி பேரம் பேசி தான் வாங்குகின்றனர். மீன்பிடி தடைக்காலங்களில் உள்ளூர் நாட்டுமீன்களின் விலையும் உயர்ந்து விடுகிறது. எனவே இந்த மீன்பிடி தடைக்காலத்தை கோடை விடுமுறை காலங்களில் அமல்படுத்தாமல் அக்டோபர், நவம்பர் போன்ற காலங்களில் அமல்படுத்தலாம்' என்றார்.
விலை ஏற்றம்
கம்பத்தைச் சேர்ந்த அழகுக் கலை நிபுணர் அபிராமி கூறும்போது, 'அசைவ பிரியர்களின் விருப்ப உணவுகளில் கடல் மீன்களுக்கு முக்கிய இடம் உண்டு. மீன்பிடி தடை காலங்களில் கடல் மீன்கள் விலை பன்மடங்கு உயர்ந்து விடுகிறது. ஏழை, எளிய மக்களால் வஞ்சிரம் மீன் விற்கும் விலைக்கு அதை வாங்கி சாப்பிடுவது குறித்து நினைத்து கூட பார்க்க முடியவில்லை. மீன்பிடி தடைக்காலத்தை மாற்ற வேண்டும் என்பது மீனவர்களின் கோரிக்கையாகவும் இருந்து வருகிறது. அந்த தடைக்காலம் மாற்றப்பட்டால் கோடை விடுமுறை காலங்களில் மீன்களின் விலை ஏற்றம் தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது' என்றார்.
மாற்றி அமைக்க வேண்டும்
திண்டுக்கல்லை சேர்ந்த மீன் வியாபாரி வேலவன் கூறும்போது, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், மூக்கையூர் பகுதிகளில் இருந்தும், தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் மீன்கள் திண்டுக்கல்லுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மீன்கள் இனப்பெருக்கத்துக்காக முன்பு 45 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் தற்போது 61 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுவும் கோடை காலத்தில் இந்த தடைக்காலம் விதிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் கிடைக்கும் சொற்ப மீன்களில் முட்டைகளோ, குஞ்சுகளோ அவ்வளவாக இருக்காது. அதுவே மழைக்காலத்தில் பிடிக்கப்படும் மீன்களில் இவை எல்லாமே இருக்கும். எனவே மழைக்காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மீன் பிடி தடைக்காலத்தை மாற்றி அமைக்கலாம்.
மீன் பிடி தடைக்காலத்தில் மீன்களின் விலை உயர்ந்தாலும் அதனால் எங்களுக்கு வருமானம் அதிகரிப்பதில்லை. ஏனென்றால் மற்ற நாட்களில் கிடைக்கும் மீன்களின் அளவை விட மீன்பிடி தடை காலத்தில் குறைவாகவே இருக்கும். இதனால் கூடுதல் விலை கிடைத்தும் பலனில்லை. விலையும் அதிகமாக உயர்த்தப்படுவதில்லை மற்ற நாட்களில் ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.1,000-த்துக்கு விற்றால் மீன்பிடி தடை காலத்தில் ரூ.1,300 வரையே விற்க முடிகிறது என்றார்.
கூடுதல் விலை
திண்டுக்கல்லை சேர்ந்த இல்லத்தரசி லீமா ரோசி கூறும்போது, ஆறுகள், அணைகள், குளங்களில் கிடைக்கும் மீன்களைவிட கடல்களில் பிடித்து மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்படும் மீன்களையே மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் வஞ்சிரம், சங்கரா, இறால் உள்ளிட்ட மீன்களையே அதிக அளவில் விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள். மீன்பிடி தடை காலத்திலும் இந்த வகை மீன்கள் கிடைக்கும் என்றாலும் அவற்றின் விலை அதிகமாக இருப்பதால் நடுத்தர வர்க்கத்தினரால் அவர்களுக்கு தேவைப்படும் அளவில் மீன்களை வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. வழக்கமாக 2 கிலோ வரை மீன்களை வாங்குபவர்கள் மீன்பிடி தடை காலத்தில் ஒரு கிலோ முதல் 1¼ கிலோ வரையே வாங்கும் நிலை இருக்கிறது.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடை காலமான 61 நாட்களும் மீன்களை தேவையான அளவு வாங்கி சாப்பிட முடிவதில்லையே என்ற ஏக்கம் மக்களிடம் இருக்கத்தான் செய்கிறது. இதனை தவிர்க்க வேண்டும் என்றால் மீன்பிடி தடைக்காலத்தை குறைக்க வேண்டும் அல்லது மழைக்காலத்துக்கு மாற்றி அமைக்க வேண்டும் என்றார்.