மீன்பிடி தடைக்காலம் நாளை முதல் அமல்


மீன்பிடி தடைக்காலம் நாளை முதல் அமல்
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலில் மீன்கள் இனப்பெருக்கத்துக்காக மீன்பிடி தடைக்காலம் நாளை(சனிக்கிழமை) முதல் 61 நாட்களுக்கு அமலில் இருக்கும் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

கடலில் மீன்கள் இனப்பெருக்கத்துக்காக மீன்பிடி தடைக்காலம் நாளை(சனிக்கிழமை) முதல் 61 நாட்களுக்கு அமலில் இருக்கும் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

மீன்கள் இனப்பெருக்கம்

தமிழகத்தில் கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் மீன்கள் இனப்பெருக்க காலமாக குறிப்பிட்ட நாட்கள் கருதப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் கடலில் யாரும் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த நாட்கள் மீன்பிடி தடை காலமாக நடைமுறையில் உள்ளது. மீன் வளத்தை பெருக்கவும், பாதுகாத்திடும் வகையில் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் படி தடைக்காலம் அறிவிக்கப்படும்.

அதன்படி இந்த ஆண்டில் நாளை (சனிக்கிழமை) முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன் பிடி தடை காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தமிழகத்தில் கிழக்கு கடலோர பகுதியில் திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை இந்த தடை காலம் அமலில் இருக்கும்.

தடைக்காலம்

இந்த நாட்களில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மேற்காணும் தடைசெய்யப்பட்ட 61 நாட்களுக்கும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக் கூடாது. மீன்பிடிப்பதை நிறுத்தி வைப்பதன் மூலம் இடையூறு இல்லாத இனவிருத்தி மேம்பட்டு மீன்வளம் பெருக வாய்ப்புள்ளது.

எனவே மீனவர்கள் நலன் கருதி அரசு வகுத்துள்ள இத்தடை ஆணையின்படி குறிப்பிடப்பட்டுள்ள 61 நாட்கள் முடியும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story