மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரத்து 497 கன அடியாக சரிவு


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரத்து 497 கன அடியாக சரிவு
x

மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 12 ஆயிரத்து 303 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை மீண்டும் சரிந்து விநாடிக்கு 10 ஆயிரத்து 497 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர்,

கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மீண்டும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் 14 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 9 ஆயிரம் கன அடியாக சரிந்தது. ஆனாலும் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் அமர்ந்து உற்சாகமாக படகு சவாரி சென்று அருவியின் அழகை பார்த்து ரசித்து வருகிறார்கள். ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 12 ஆயிரத்து 303 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை மீண்டும் சரிந்து விநாடிக்கு 10 ஆயிரத்து 497 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்கு நேற்று 10 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 900 கன அடி தண்ணீரும் என மொத்தம் 10 ஆயிரத்து 900 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 118.76 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 118.72 அடியானது. இனிவரும் நாட்களில் நீர்வரத்து அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.


Next Story