இடிந்து விழும் நிலையில் தரைப்பாலம்
திருக்காட்டுப்பள்ளி அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள தரைப்பாலத்தின் தலைப்பு பகுதியை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்காட்டுப்பள்ளி:
திருக்காட்டுப்பள்ளி அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள தரைப்பாலத்தின் தலைப்பு பகுதியை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த தரைப்பாலம்
திருக்காட்டுப்பள்ளி அருகே ரங்கநாதபுரம் பிரிவு பகுதியில் பிரதான சாலையில் காவிரி ஆற்றின் பாசன கிளை வாய்க்காலின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலத்தில் திருக்காட்டுப்பள்ளி பாசன வாய்க்கால் தலைப்பு என்று பொதுப்பணித்துறையினரால் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை உளளது.
திருக்காட்டுப்பள்ளி- தோகூர் பிரதான சாலையில் இந்த பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த சாலையில் உள்ள தரைப்பாலத்தின் தலைபபு பகுதியில் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது. இதனால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
சீரமைக்க வேண்டும்
இந்த தரைப்பாலம் பழமையானதாக இருப்பதால் இதை அகற்றி விட்டு புதிதாக அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பகுதியில் ஏராளமான சிறு கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள், இந்த வழியாக சென்று வருகிறது. எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தரைப்பாலத்தை பார்வையிட்டு அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது புதிதாக கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.