தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது
அபிராமம் அருகே தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
கமுதி,
அபிராமம் அருகே தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
தரைப்பாலம் மூழ்கியது
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே செய்யாமங்கலம் கிராமத்தில் ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கொடுமலூர் மற்றும் பார்த்திபனூர் செல்வதற்கு அப்பகுதியில் உள்ள தரைப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பார்த்திபனூர் வழியாக பரளையாற்றில் தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக செய்யாமங்கலம் கிராமத்தில் வழியாக செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.
5 கிராம மக்கள் பாதிப்பு
வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் செய்யாமங்கலம், தாதனேந்தல், முனியனேந்தல் உள்பட 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் மாணவ, மாணவிகளும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும் ஆபத்தை உணராமல் சிலர் கயிறு கட்டி தரைப்பாலத்தை கடந்து செல்கின்றனர்.
இந்த தரைப்பாலத்தை மேம்பாலமாக உயர்த்தி தர வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் கூறினர். இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.