யானை கூட்டத்தை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர்


பூதப்பாண்டி அருகே விளைநிலங்களுக்குள் இரவில் முகாமிட்டிருந்த யானை கூட்டத்தை பட்டாசு வெடித்து வனத்துறையினர் விரட்டினர்.

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே விளைநிலங்களுக்குள் இரவில் முகாமிட்டிருந்த யானை கூட்டத்தை பட்டாசு வெடித்து வனத்துறையினர் விரட்டினர்.

வாழைகள் நாசம்

பூதப்பாண்டி அருகே உள்ள தெள்ளாந்தி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், விவசாயி. இவர் தாடகை மலை அடிவாரத்தில் உள்ள உடையார்கோணம் பகுதியில் 2 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து 1,200 வாழைகளை நட்டார். கடந்த மாதம் யானை கூட்டம் புகுந்து 700 வாழைகளை நாசம் செய்தன. 7-ந்தேதி மீண்டும் யானைகள் புகுந்து 500 வாழைகளை துவம்சம் செய்தன. யானை கூட்டம் புகுந்து வாழைகளை நாசப்படுத்தியதால், அவற்றுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

8-ந்தேதி பால்ராஜ் என்பவரின் தோட்டத்தில் புகுந்த யானைகள் 50 தென்னங்கன்றுகளை பிடுங்கி எறிந்தன

பட்டாசு வெடித்து விரட்டினர்

இதனை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, யானைகள் நாசம் செய்த வாழைகள் மற்றும் தென்னங்கன்றுகளை பார்வையிட்டனர். அவற்றுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று கூறினார்கள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மாவட்ட வன அதிகாரி இளையராஜா தலைமையில் உதவி வன அலுவலர் சிவக்குமார், பூதப்பாண்டி வன சரகர் ரவீந்திரன் மற்றும் களப்பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அங்கு இரவில் முகாமிட்டிருந்த 7 யானைகள் கொண்ட கூட்டத்தை பட்டாசு வெடித்தும், தீப்பந்தங்களை கொண்டும் விரட்டினார்கள். வனத்துறையினர் சுமார் 3 மணி நேரம் அங்கு முகாமிட்டு யானை கூட்டம் ஊருக்குள் வராமல் தடுத்தனர்.

இது குறித்து வன அதிகாரி இளையராஜா கூறும் போது, 'யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க முறைப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

தடுப்பு சுவர்

மேலும், யானைகள் அந்த பகுதியில் வராமல் தடுப்பதற்கு உடையார் கோணம் பகுதியில் தோவாளை கால்வாயின் குறுக்கே செல்லும் பாலத்தில் 6 அடி உயரத்துக்கு தடுப்பு சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.


Next Story