குட்டி யானையை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் முயற்சி


குட்டி யானையை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் முயற்சி
x

வயநாட்டில் புலி தாக்கி குட்டி யானை காயத்துடன் தவித்தது. தொடர்ந்து வனத்துறையினர் சிகிச்சை அளித்து தாயுடன் சேர்க்க முயற்சித்து வருகின்றனர்.

நீலகிரி

கூடலூர்,

வயநாட்டில் புலி தாக்கி குட்டி யானை காயத்துடன் தவித்தது. தொடர்ந்து வனத்துறையினர் சிகிச்சை அளித்து தாயுடன் சேர்க்க முயற்சித்து வருகின்றனர்.

தவித்த குட்டி யானை

கேரள மாநிலம் வயநாடு மற்றும் கூடலூர் வனப்பகுதியில் காட்டு யானைகள், புலிகள், கரடிகள், மான்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்தநிலையில் வயநாடு மாவட்டம் மானந்தவாடி தாலுகா பேகூர் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பபாறா என்ற இடத்தில் ஒரு வயதான குட்டி யானை ஒன்று தனியாக நின்று தவித்துக் கொண்டிருந்தது.

இதைக்கண்ட வனத்துறையினர் அதனை பிடித்து பார்வையிட்டனர். அப்போது அதன் உடலில் பல இடங்களில் காயம் இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து முத்தங்கா சரணாலய கால்நடை டாக்டர் அருண் சக்கரியா உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். அப்போது மருத்துவ குழுவினர் குட்டி யானையின் உடலை பரிசோதித்தனர். இதில் புலி தாக்கி காயம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.

தாயுடன் சேர்க்க முயற்சி

மேலும் அப்பகுதியில் புலியின் கால் தடங்கள் இருப்பதை வனத்துறையினர் கண்டனர். பின்னர் காயத்துடன் அவதிப்பட்ட குட்டி யானைக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதனிடையே குட்டி யானையின் தாயை வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து நேற்று குட்டி யானையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து தாய் யானையுடன் குட்டியை சேர்ப்பதற்கான முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, புலி தாக்கி குட்டி யானை காயம் அடைந்து உள்ளது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளது. தற்போது உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதால் தாயுடன் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.


Next Story