காயாமொழியில் ரூ.20.50 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது
காயாமொழியில் ரூ.20.50 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது
திருச்செந்தூர்:
காயாமொழியில் ரூ.20½ லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.
அடிக்கல் நாட்டு விழா
திருச்செந்தூர் யூனியன் காயாமொழியில் 2021-2022-ம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சத்து 50 ஆயிரம் செலவில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து அவர், அப்பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் ரூ.9 லட்சத்து 8 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார்.
விழாவில் திருச்செந்தூர் யூனியன் ஆணையாளர் பொங்கலரசி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து கிருஷ்ணராஜா, உதவி பொறியாளர் ஹாரிஸ், காயாமொழி பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரன், செயலாளர் இசக்கியம்மாள், ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், ஒன்றிய செயலாளர்கள் செங்குழி ரமேஷ், பாலசிங், ஒன்றிய துணை செயலாளர் அமிர்தலிங்கம், திருச்செந்தூர் நகர செயலாளர் வாள்சுடலை, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் தனலட்சுமி, அரிச்சந்திரன், மாணிக்கம், ஷேக் முகைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மைதானங்கள் நவீனப்படுத்தும் பணி
காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்ஸ் கிளப்புக்கு சொந்தமான கால்பந்து, கிரிக்கெட் மைதானங்கள் மழை நேரங்களில் மிகவும் பாதிக்கப்பட்டன. இதையடுத்து அந்த மைதானங்களை நவீனப்படுத்த வேண்டும் என்று ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து கனிமொழி எம்.பி.யிடம் பேசி, மைதானங்களை தரம் உயர்த்துவதாக அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி விளையாட்டு மைதானங்களை நவீனப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகளை மேற்பார்வை செய்யும் சாகுபுரம் தொழிற்சாலை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.
அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன், கபடி கந்தன், ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் அயூப், பொருளாளர் சுலைமான், துணைத்தலைவர் இக்பால், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை தலைவர் முகைதீன் தம்பி, நகரசபை தலைவர் கே.ஏ.எஸ்.முத்து முகமது, துணைத்தலைவர் சுல்தான் லெப்பை, தி.மு.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.