விபரீதத்தில் முடிந்த விளையாட்டு... திருச்சியில் சக மாணவர்கள் சேர்ந்து தாக்கியதில் 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு..!


விபரீதத்தில் முடிந்த விளையாட்டு... திருச்சியில் சக மாணவர்கள் சேர்ந்து தாக்கியதில் 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு..!
x

மாணவனின் இறப்புக்கு நியாயம் கேட்டு மாணவனின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளி முன் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி மாவட்டம் பாலசமுத்திரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் சோலூர்பட்டியை சேர்ந்த மவுலீஸ்வரன் என்ற மாணவன் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளான்.

இந்த நிலையில், இன்று பள்ளி வளாகத்தில் மாணவர்கள் அமர்ந்து படித்துக்கொண்டு இருந்தனர். அப்போது சில மாணவர்கள் சிறு சிறு கற்களை தூக்கிப்போட்டி விளையாடிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது.

அப்போது அங்கிருந்த சக மாணவர்கள், தவறாக எண்ணி மவுலீஸ்வரனை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மாணவனை அங்கிருந்த ஆசிரியர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் மவுலீஸ்வரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். மாணவனின் இறப்புக்கு நியாயம் கேட்டு மாணவனின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளி முன் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் விரைந்து வந்து மவுலீஸ்வரனை தாக்கிய 3 மாணவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


Next Story