அலுவலகத்தில் புகுந்து தொழில் அதிபரை கொன்ற கும்பல்


அலுவலகத்தில் புகுந்து தொழில் அதிபரை கொன்ற கும்பல்
x

விருதுநகரில் அலுவலகத்தில் புகுந்து தொழில் அதிபரை வெட்டிக்கொன்ற கும்பலை போலீசார் தேடிவருகிறார்கள். இந்த சம்பவத்தில் அவருடைய உறவினர்கள் 2 பேரும் வெட்டுக்காயம் அடைந்தனர்.

விருதுநகர்


விருதுநகரில் அலுவலகத்தில் புகுந்து தொழில் அதிபரை வெட்டிக்கொன்ற கும்பலை போலீசார் தேடிவருகிறார்கள். இந்த சம்பவத்தில் அவருடைய உறவினர்கள் 2 பேரும் வெட்டுக்காயம் அடைந்தனர்.

தொழில் அதிபர்

விருதுநகர் மேலத்தெரு குப்பையா தேவர் சந்து பகுதியை சேர்ந்தவர் குமரவேல் (வயது 56). இவர் விருதுநகரில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதுடன் விருதுநகர் நகராட்சி மார்க்கெட் வசூல் உள்ளிட்ட குத்தகைகளையும் எடுத்துள்ளார். மருது சேனை அமைப்பின் மாநில பொருளாளராகவும் இருந்து வந்தார்.

நேற்று மாலை 4.30 மணிக்கு அவர், விருதுநகர் தேசபந்து திடலின் எதிரே உள்ள மாம்பழ பேட்டையில் அவரது அலுவலகத்தில் இருந்தார்.

அவருடைய உறவினர்களான ரூபி (41) என்ற பெண்ணும், ராம்குமாரும் (34) அங்கிருந்தனர். இதில் ரூபி, குமரவேலின் அலுவலக கணக்குகளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

அலுவலகத்தில் புகுந்து வெட்டு

அப்போது 8 பேர் ஆயுதங்களுடன் திடீரென குமரவேலின் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குமரவேல் அங்கிருந்து தப்ப முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது.

அவரது தலை, வயிறு, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்து அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதை தடுக்க வந்த ரூபி, ராம்குமார் ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, குமரவேல், ரூபி, ராம்குமார் ஆகிய 3 பேரையும் உடனடியாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் குமரவேல் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குமரவேலின் உடல் பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் மேற்கு போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.

பழிக்குப்பழியாக

முதற்கட்ட விசாரணையில் குமரவேலை படுகொலை செய்தது கூலிப்படை என கூறப்படுகிறது. மேலும் விருதுநகர் மார்க்கெட் குத்தகை எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் காரைக்குடியில் நடந்த கொலைக்கு பழிக்குப்பழியாக இந்தகொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இருந்தாலும் முழுமையான விசாரணைக்கு பின்னர்தான் கொலைக்கான பின்னணி குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுவதால், தேசபந்துதிடல், விருதுநகர் பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குமரவேலுக்கு உமா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.


Next Story