கஞ்சா போதையில் 3 பேரை அரிவாளால் வெட்டிய கும்பல்


தினத்தந்தி 25 July 2023 12:15 AM IST (Updated: 25 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் கஞ்சா போதையில் 3 பேரை அரிவாளால் வெட்டிய கும்பலில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் கஞ்சா போதையில் 3 பேரை அரிவாளால் வெட்டிய கும்பலில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா போதை

குமரி மாவட்டத்தில் கஞ்சா கும்பலை ஒழிக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும் கஞ்சா விற்பனையை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

இந்தநிலையில் கஞ்சா போதையில் ஒரு கும்பல் 3 பேரை சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதாவது நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் (வயது 40) என்பவர் விவேகானந்தபுரத்தில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் செலுத்தினார்.

பின்னர் அங்கு நிறுத்திய மோட்டார் சைக்கிளை எடுக்க முயன்றார். அப்போது சுனாமி காலனி பகுதியை சேர்ந்த ஜெப்ரின் (20) என்ற வாலிபர் கஞ்சா போதையில் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தார்.

அரிவாள் வெட்டு

அந்த சமயத்தில் மோகன்தாஸின் மோட்டார் சைக்கிள், ஜெப்ரின் மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதில் தட்டு தடுமாறி ஜெப்ரின் கீழே விழுந்தார். உடனே மோகன்தாஸ் அவரை தூக்க முயன்றார். ஏற்கனவே கஞ்சா போதையில் இருந்ததால் ஜெப்ரின், அதனை பொருட்படுத்தாமல் மோகன்தாஸிடம் தகராறில் ஈடுபட்டார்.

மேலும் அவரை அங்கிருந்து செல்ல விடாமல் தடுத்த ஜெப்ரின், தன்னுடைய 2 நண்பர்களை அங்கு வரவழைத்தார். மோட்டார் சைக்கிளில் இருவரும் அரிவாளுடன் வந்த வேகத்தில் திடீரென மோகன்தாஸின் தலையில் வெட்டினர். இதில் படுகாயமடைந்த அவர் அலறி துடித்தார்.

2 பேர் கைது

உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சுனாமி காலனி பகுதிக்கு விரைந்தனர். அங்கு முன்விரோதம் காரணமாக டைசன் (27), ஆக்னல் ஆகிய 2 பேரை அரிவாளால் வெட்டி அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மோகன்தாஸ் உள்பட 3 பேரையும் அந்த பகுதியில் நின்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்.

இதற்கிடையே போதையில் இருந்த ஜெப்ரின் ஆஸ்பத்திரிக்கு வந்து காயமடைந்தவர்களை மீண்டும் தாக்க வந்தார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை மடக்கி பிடிக்க முயன்றனர்.

ஆனால் தப்பி ஓட முயன்ற போது அவர் தவறி கீழே விழுந்து காயமடைந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் கஞ்சா போதையில் இருந்த ஜெப்ரின் போலீசாருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். தொடர்ந்து சிகிச்சைக்கு பிறகு அவரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஜெப்ரினின் நண்பர்கள் 2 பேரை தேடினர். இதில் கான்ஸ்டன் ராபின் (21) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடிவருகின்றனர்.

கஞ்சா போதையில் 3 பேரை அரிவாளால் வெட்டிய கும்பலில் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story