வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு24 ஆடுகளை திருடிய கும்பல்
மகாராஜகடை அருகே வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு 24 ஆடுகளை கும்பல் திருடியது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் லாரியில் தப்பி ஓட்டம் பிடித்தனர்.
குருபரப்பள்ளி
24 ஆடுகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை கிராமத்தை சேர்ந்தவர் அப்பையன். இவருடைய மனைவி முனிலட்சுமி. இந்த தம்பதி ஆடுகள் வளர்த்து வருகின்றனர். இவர்கள் தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம்.
சம்பவத்தன்று மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்து விட்டு தம்பதியினர் தூங்கினர்.
இரவு 11 மணி அளவில் அப்பையன் வீட்டின் முன்பு பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த 24 ஆடுகளை ஒரு கும்பல் லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தது. இதைக்கண்ட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடி வந்தனர்.
தப்பி ஓட்டம்
அதற்குள் அந்த கும்பல் 24 ஆடுகளுடன் லாரியில் தப்பி சென்றது. பின்னர் அந்த பகுதியில் சுற்றி திரிந்த 6 ஆடுகளை பட்டியில் அடைத்தனர். அப்பையன் வீட்டை அந்த பகுதியில் உள்ளவர்கள் பார்த்த போது வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.
இதற்கிடையே ஆடுகள் அலறல் சத்தம் கேட்டு அப்பையன் விழித்துள்ளார். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. அக்கம் பக்கத்தினர் வந்து அப்பையன் வீட்டுக் கதவை திறந்துள்ளனர்.
போலீசில் புகார்
இதுகுறித்து அப்பையன் மகாராஜகடை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்று தொடர்ந்து அந்த பகுதியில் கால்நடைகள் திருட்டு போவதாக விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.