ஆற்று மணலை கடத்த முயன்ற கும்பல்
மாத்தூர் தொட்டிப்பாலம் அருகே ஆற்று மணலை கடத்த முயன்ற கும்பல், போலீசாரை கண்டதும் தப்பி ஓடி விட்டனர்.
திருவட்டார்:
மாத்தூர் தொட்டிப்பாலம் அருகே ஆற்று மணலை கடத்த முயன்ற கும்பல், போலீசாரை கண்டதும் தப்பி ஓடி விட்டனர்.
மணல் கடத்தல்
பரளியாறு மேற்குத்தொடர்ச்சிமலையில் உற்பத்தியாகி பெருஞ்சாணி, மலவிளை, திருவட்டார் வழியாக பாய்ந்து மூவாற்றுமுகம் பகுதியில் கோதையாற்றுடன் இணைந்து குழித்துறையில் தாமிரபரணியுடன் கலக்கிறது. மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது மலையில் இருந்து அடித்து வரும் மணல் குவியல் பரளியாற்றில் தேங்கி விடுகிறது.
இதனால் அந்த மணலை கடத்த ஒரு கும்பல் ஆற்று படுகைகளையே சுற்றி, சுற்றி வருகின்றன. பகல் நேரங்களில் ஆற்றில் தேங்கி கிடக்கும் மணல் குவியலை எடுத்து சாக்குமூடைகளில் கட்டி புதருக்குள் மறைத்து வைத்து விடுவார்கள். இரவு நேரங்களில் டெம்போ உள்ளிட்ட வாகனங்களை கொண்டு வந்து அதில் மணல் மூடைகளை கடத்தி செல்வது வழக்கம்.
தப்பி ஓட்டம்
இதை தடுக்க போலீசார் இரவில் ரோந்து சென்று மணல் கடத்தலுக்கு பயன்படுத்தும் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் மாத்தூர் தொட்டிப்பாலம் பகுதியில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது தொட்டிப்பாலத்தையொட்டி ஆறு பாயும் பகுதியில் இருந்து மணலை மூடைகளாக கட்டி ஒரு கும்பல் டெம்போவில் ஏற்றிக்கொண்டிருந்தது. போலீசைக்கண்டதும் அந்த கும்பல் டெம்போவை அங்கேயே விட்டு, விட்டு தப்பி ஓடி விட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கிருந்த மணல்மூட்டைகளை டெம்போவில் ஏற்றி திருவட்டார் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். 25 சாக்குபைகளில் கால் யூனிட் மணல் இருந்தது.
இதுதொடர்பாக முதலார் அம்பலத்தடிவிளையை சேர்ந்த டெம்போ டிரைவர் சுனில் (வயது 32) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.