கடலூர் மாநகராட்சியில் நிலவும் குப்பை பிரச்சினைக்கு ஓராண்டில் தீர்வு காண முடியாது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி


கடலூர் மாநகராட்சியில் நிலவும் குப்பை பிரச்சினைக்கு ஓராண்டில் தீர்வு காண முடியாது  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி
x

கடலூர் மாநகராட்சியில் நிலவும் குப்பை பிரச்சினைக்கு ஓராண்டு காலத்தில் தீர்வு காண முடியாது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

கடலூர்

கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு, குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, மருத்துவமனை கண்காணிப்பாளர் சாய்லீலா, மாநகராட்சி மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் இருந்து ரூ25.5 லட்சம் மதிப்பில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான தீவிர சிகிச்சை பிரிவிற்கு நவீன உயர் சிகிச்சை கருவிகள் வழங்கினார். தொடர்ந்து ரூ.5.5 லட்சம் மதிப்பில் பேரிடர் கால நவீன காணொலி காட்சி கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்த அவர், நோயாளிகளுக்கான பேட்டரி கார் சேவையை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குப்பை

கடலூர் மாநகராட்சி பகுதியில் குப்பைகளை முழுமையாக அகற்ற மாநகராட்சி மேயர், துணை மேயர் ஆகியோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குப்பை கொட்டுவதற்காக சுமார் 50 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் சில சிக்கல்கள் உள்ளதால், சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதன் பிறகு நிலம் கையகப்படுத்தப்படும். அதன் மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படும்.

கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் குப்பைகள் ஏதும் முறையாக அகற்றப்படவில்லை. தற்போது மாநகராட்சி மேயர் தேர்தல் நடந்த பிறகே மாநகராட்சி மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கலெக்டரின் உதவியுடன் குப்பைகளை அகற்றும் பணியை தொடங்கி உள்ளனர். ஆனால் ஓராண்டு காலத்தில் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. அதற்கு ஒரு காலம் வரும். மேலும் முடிவடையாத பாதாள சாக்கடை பணியை மழைக்காலம் தொடங்குவதற்குள் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வடிகால் வாய்க்கால் சீரமைக்கப்பட்டு, கழிவுநீர் தடையின்றி செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறுவை சாகுபடி

தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கு தேவையான யூரியா, உரம், பொட்டாஷ், டி.ஏ.பி. உரம் 54 ஆயிரத்து 300 மெட்ரிக் டன் கையிருப்பில் இருந்தது. இதில் கடந்த மாதம் வரை 44 ஆயிரத்து 11 மெட்ரிக் டன் உரம் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும், கடைகள் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 242 டன் காம்ப்ளக்ஸ், பொட்டாஷ், டி.ஏ.பி., யூரியா ஆகிய உரங்கள் இருப்பில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாநகராட்சி நகர்நல அலுவலர் அரவிந்த்ஜோதி, தி.மு.க. நகர செயலாளர் ராஜா, வி.ஆர்.அறக்கட்டளை நிறுவனர் விஜயசுந்தரம் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story