எனது தலைமையில் பொதுக்குழு கூடும் -ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


எனது தலைமையில் பொதுக்குழு கூடும் -ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x

மாநில, மாவட்டவாரியாக நிர்வாகிகள் நியமனம் முடிந்த பிறகு தனது தலைமையில் பொதுக்குழு கூடும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னை,

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். ஒன்றுபட்ட அ.தி.மு.க. என்ற கோஷத்தை முன்வைத்து தனது அணி சார்பில் மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்களையும், மாநில அளவில் நிர்வாகிகளையும் ஓ.பன்னீர்செல்வம் நியமித்து வருகிறார்.

மறுபக்கம் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இணைய வாய்ப்பு இல்லை

சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே நேரத்தில் சந்தித்து வழியனுப்பிய நிகழ்வு, அ.தி.மு.க. தொண்டர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியது. அவர்கள் இருவரும் இணைய போகிறார்களா? என்ற கேள்வியும் எழுந்தது.

ஆனால் இதற்கு வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி உடனடியாக மறுப்பு தெரிவித்தார். அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், அந்த தீர்ப்பை எதிர்பார்த்து அ.தி.மு.க. தொண்டர்கள் காத்திருக்கிறார்கள்.

பொதுக்குழு

இந்தநிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நிர்வாகிகள் சந்தித்து பேசினர். இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறீர்கள். நீங்கள் பொதுக்குழுவை கூட்டுவீர்களா?

பதில்:- வெகு விரைவில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் எனது தலைமையில் நடைபெறும். முதலில் மாநில, மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் முழுமையாக முடிந்த பின்னர் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்த இருக்கிறோம். அதன்பிறகு எனது தலைமையில் உறுதியாக பொதுக்குழு கூட்டம் நடக்கும். தொடர்ந்து மாவட்டம் வாரியாக நான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.

கேள்வி:- உங்கள் சுற்றுப்பயணம் எதை மையப்படுத்தி இருக்கும்?

பதில்:- நிர்வாகிகளை நியமித்து வருகிறோம். அந்த பணிகள் முடிந்த பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை மாவட்ட சுற்றுப்பயணத்தில் நான் சந்தித்து பேசுவேன்.

டி.டி.வி.தினகரனை சந்திப்பேன்

கேள்வி:- பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறீர்களே?

பதில்:- இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். அரசியல் ரீதியானது அல்ல.

கேள்வி:- டி.டி.வி.தினகரனை சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:- இதற்கு நான் ஏற்கனவே பதில் கூறி விட்டேன், வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.


Next Story