டவுன் பஸ்சில் பெண் தவறவிட்ட ரூ.18 ஆயிரத்தை பத்திரமாக ஒப்படைத்த கண்டக்டர் பயணிகள் பாராட்டு
பயணிகள் பாராட்டு
ஈரோட்டில் இருந்து சித்தோடு வழியாக பவானிக்கு 3பி டவுன் பஸ் சென்று வருகிறது. நேற்று காைல 11 மணியளவில் ஒரு பெண் சித்தோட்டில் இருந்து பவானிக்கு இந்த பஸ்சில் சென்றார். பஸ் பவானி சென்றதும் தன்னுடைய பர்சை இருக்கையிலேயே வைத்துவிட்டு அவசரமாக கீழே இறங்கி வீட்டுக்கு சென்றுவிட்டார்.
பயணிகள் இறங்கிய பின்னர் இருக்கையின் கீழே ஒரு பர்சு கிடப்பதை பார்த்த கண்டக்டர் மாதேஸ்வரன் அதை எடுத்து பிரித்து பார்த்தார். அதில் ரூ.18 ஆயிரம் இருந்தது. யாரோ பயணிகள் பணத்தை தவறிவிட்டு சென்றுவிட்டார்கள் என்பதை உணர்ந்த மாதேஸ்வரன் உடனே பவானி கிளை மேலாளர் திருமூர்த்தியை தொடர்பு கொண்டு இதுபற்றி கூறினார்.
இந்தநிலையில் பணத்தை தவற விட்ட பெண் பதறி அடித்து டவுன் பஸ் நின்றிருந்த இடத்துக்கு வந்தார். இதை கண்ட மாதேஸ்வரன் உங்கள் பணம் என்னிடம்தான் உள்ளது. இதுகுறித்து கிளை மேலாளரிடம் தெரிவித்துள்ளோம். அவர் வந்ததும் உரிய அடையாளம் சொல்லி பெற்றுச்செல்லுங்கள் என்றார். அதன்பின்னர் சிறிது நேரத்தில் மேலாளர் திருமூர்த்தி வந்ததும் உரிய அடையாளம் கூறி சம்பந்தப்பட்ட பெண் பணத்துடன் பர்சை பெற்றுக்கொண்டார். பின்னர் கண்டக்டர் மாதேஸ்வரனுக்கு நன்றி கூறினார். பஸ் நிலையத்தில் இருந்த மற்ற பயணிகளும் கண்டக்டரை பாராட்டினார்கள்.