சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை-ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
ஊட்டி
16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
பாலியல் பலாத்காரம்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த எருமாடு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 35). இவர் அந்த பகுதியில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் இவர் தன்னுடன் தொழிலாளியாக பணியாற்றிய ஒருவரிடம் பேசுவதற்காக செல்போனில் அழைத்துள்ளார். அப்போது செல்போனை அவரது 16 வயது மகள் எடுத்துப் பேசி உள்ளார். இதைத் தொடர்ந்து அந்த சிறுமியிடம் மகேந்திரன் தொடர்ந்து பேச்சு கொடுத்து பழகி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார்.
போக்சோவில் கைது
இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு அந்த சிறுமியிடம் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து, அந்த சிறுமியை கோவை மாவட்டம் சூலூருக்கு கடத்தி சென்று அங்குள்ள விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் செய்தார். பின்னர் அவரை திருப்பூருக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் அங்கு 2 மாத காலம் சிறுமியுடன் தங்கி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் எருமாடு போலீஸ் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம்- 366 (சிறுமியை கடத்தி செல்லுதல்) மற்றும் போக்சோ ஆகிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மகேந்திரனை கைது செய்தனர்.
20 ஆண்டு ஜெயில்
இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகளிர் கோர்ட்டில் கடந்த 3 ஆண்டுகனாக நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி சிறுமியை கடத்தி சென்ற வழக்கில் ரூ.5 வருடம் மற்றும் 5 ஆயிரம் அபராதம், போக்சோ வழக்கின் கீழ் 20 வருடம் மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மகிளா கோர்ட்டு நீதிபதி நாராயணன் தீர்ப்பு கூறினார். மேலும் அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், இதை ஏக காலத்தில் அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகினார்.