பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் ரெயில் ஏறி பழனிக்கு தனியாக வந்த சிறுமி


பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் ரெயில் ஏறி பழனிக்கு தனியாக வந்த சிறுமி
x

பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் ரெயில் ஏறி பழனிக்கு தனியாக வந்த சிறுமியை போலீசார் மீட்டனர்.

திண்டுக்கல்

மதுரையில் இருந்து கோவைக்கு செல்லும் பாசஞ்சர் ரெயில் இன்று காலை 10 மணி அளவில் பழனி ரெயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது ரெயிலில் இருந்து பயணிகள் இறங்கினர். பின்னர் சிறிது நேரத்தில் அந்த ரெயில் அங்கிருந்து சென்றுவிட்டது. இதற்கிடையே ரெயில் நிலைய நடைமேடையில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது நடைமேடையில் தனியாக ஒரு சிறுமி சுற்றி திரிந்தாள். இதனை பார்த்த போலீசார் அந்த சிறுமியிடம் விசாரித்தனர். அதில், அவள் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள குரங்குத்தோப்பு பகுதியை சேர்ந்த ராமுவின் மகள் சுவேதா (12) என்பதும், 7-ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சுவேதா, சோழவந்தானில் இருந்து ரெயில் ஏறி தனியாக பழனிக்கு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் இதுகுறித்து வாடிப்பட்டி போலீசாருக்கும், பழனி சைல்டுலைன் அமைப்புக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வாடிப்பட்டி போலீசார் சிறுமியின் பெற்றோரிடம், சுவேதா பழனியில் இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து ராமு, உடனடியாக பழனி ரெயில்நிலையத்துக்கு புறப்பட்டு வந்தார். அதேபோல் சைல்டுலைன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பெரியதுரை மற்றும் அமைப்பினரும் ரெயில்நிலையத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் முன்னிலையில் சிறுமி சுவேதா, அவரது தந்தை ராமுவிடம் ஒப்படைக்கப்பட்டாள்.


Next Story