கோவிலுக்கு சென்ற சிறுமி தடுப்பணையில் மூழ்கி பலி
வாணியம்பாடி அருகே கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற சிறுமி தடுப்பணையில் மூழ்கி பலியானாள்.
கோவிலுக்கு சென்றனர்
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் முத்துவேல். இவர் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் ஆந்திர அரசு கட்டியுள்ள புல்லூர் தடுப்பணை பகுதியில் உள்ள கனகநாச்சி அம்மன் கோவிலில் சாமி கும்பிட சென்றுள்ளார். பின்னர் கோவில் அருகில் உள்ள தடுப்பணையில் குடும்பத்தினருடன் குளிக்க சென்றார்.
அப்போது இவரது மகள் பத்மாஜா (வயது 8) தடுப்பணையில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளாள். இதனை பார்த்த குடும்பத்தினர் கூச்சலிட்டனர். உடனே அக்கம் பக்கத்தினர் இணைந்து குழந்தையை மீட்க முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் நீரில் மூழ்கி விட்டாள்.
தடுப்பணையில் மூழ்கி பலி
உடனடியாக குப்பம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த குப்பம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தடுப்பணையில் இறங்கி சிறுமியை தேடி பிணமாக மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 23-ந் தேதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற வாலிபர் ஒருவர் இதே தடுப்பணையில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.