பழுதடைந்து கவிழும் நிலைக்கு சென்ற அரசு பஸ்
மயிலாடுதுறையில் சென்ற கொண்டிருந்த போது பழுதடைந்து கவிழும் நிலைக்கு சென்ற அரசு பஸ்சை டிரைவர் சாதுர்யத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது.
போக்குவரத்து கழக பணிமனை
மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து 79 நகர பஸ்கள் மற்றும் புறநகர் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பல பஸ்கள் உரிய பராமரிப்பின்றி பாதிவழியில் டயர்வெடித்தும், படிக்கட்டுகள் உடைந்து விழுவதும், பழுதடைந்து பாதியிலேயே நிற்பதும், விபத்து நடப்பதும் தொடர்கதையாக இருந்து வருகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் அரசு டவுன்பஸ் மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு நீடுர், கொற்கை, வரகடை, மணல்மேடு வழியாக முடிகண்டநல்லூர் கிராமத்திற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
கவிழும் நிலைக்கு சென்ற அரசு பஸ்
புறப்பட்ட அரை கிலோமீட்டர் தூரத்திலேயே காவிரி புது பாலம் அருகே சென்ற போது பஸ்சில் திடீரென சத்தம் கேட்டது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர். இதை தொடர்ந்து பஸ் சாலையில் கவிழும் நிலைக்கு சென்றது.
இதை அறிந்த டிரைவர் சாதுர்யமாக பஸ்சை சாலையின் ஓரமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். மேலும் பஸ்சின் கீழ் பட்டை (ஆங்கில்) உடைந்ததால் பஸ் பாதி வழியிலேயே நின்றுவிட்டது.
காத்திருந்த பயணிகள்
பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டு அரை மணி நேரத்திற்கு மேலாகியும் மாற்று பஸ் வராததால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் சாலையோரத்தில் பயணிகள் காத்திருந்தனர். கடைசிவரை மாற்று பஸ் வராததால் பயணிகளை தங்களது உறவினர்கள் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர்.
இந்த பழுதடைந்த பஸ்சை சரி செய்து மயிலாடுதுறை பஸ் நிலையத்திற்கு மாலை 3.30 மணிக்கு கொண்டு செல்லப்பட்டது.
முடிகண்டநல்லூர் கிராமத்திற்கு "அத்தி பூத்தார் போல்" எப்போதாவது தான் பஸ் வரும் அதுவும் தற்போது பழுதாகி நின்று விட்டது என்று பயணிகள் வேதனை தெரிவித்தனர்.
சீரமைக்க வேண்டும்
பழைய பஸ்களை உடனடியாக சீரமைத்து, நல்ல உதிரிபாகங்கள் உடன் இயக்க வேண்டும் என்று பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.