அரசு பஸ் கண்டக்டரை பணிமனை ஊழியர் தாக்கியதால் பரபரப்பு
குளித்தலையில் அரசு பஸ் கண்டக்டரை பணிமனை ஊழியர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கண்டக்டர் மீது தாக்குதல்
திருச்சியில் இருந்து கோவை நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சின் டிரைவராக ராஜுவும், கண்டக்டராக சந்திரனும் பணிபுரிந்தனர். இந்த பஸ் குளித்தலை பஸ் நிலையம் வந்தபோது பஸ்சில் ஏறிய 3 பேர் கண்டக்டரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து பஸ் கண்டக்டர் குளித்தலை போலீஸ் நிலையம் நோக்கி நடந்து சென்றுள்ளார். டிரைவர் ராஜு பஸ்சை போலீஸ் நிலையம் முன்பு நிறுத்திவிட்டு போலீஸ் நிலையத்திற்கு சென்றார்.
அவர்களைத்தொடர்ந்து பஸ்சில் வந்த பயணிகளும் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அப்போது சிறிது நேரத்திலேயே கண்டக்டரை தாக்கிய ஒரு நபர் மட்டும் போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரித்தபோது அவர் திருச்சி மாவட்டம் முசிறி அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தது தெரிய வந்தது.
இலவச குடும்ப பயண அட்டை
இதையடுத்து, அவரிடம் விசாரித்தபோது கோவையில் இருந்து திருச்சி நோக்கி அதே அரசு பஸ் குளித்தலை பஸ் நிலையம் வந்தபோது அதில் ஏறிய அவரது மகள் பஸ் கண்டக்டரிடம் இலவச குடும்ப பயண அட்டையை காண்பித்தபோது மற்றொரு பஸ்சில் வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண் பணத்தை நீட்டி டிக்கெட் கொடுங்கள் என்று கூறியுள்ளார். பின்னர் அந்த பஸ் கண்டக்டர் இலவச பஸ் பாஸ் உண்டான அட்டையை பெற்று அதற்கு உண்டான விண்ணப்பத்தில் எழுதி இலவச டிக்கெட் கொடுத்துள்ளார்.
இருப்பினும் பஸ்சில் நடந்தது குறித்து அவருடைய மகள் கூறியதை கேட்டு அதே பஸ் மீண்டும் திருச்சியில் இருந்து குளித்தலை வழியாக செல்லும்போது பஸ் கண்டக்டரை தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த தகராறு தொடர்பாக அரசு பஸ்சின் கண்டக்டர் சந்திரன் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாற்று பஸ்சில் பயணிகள் அனுப்பி வைப்பு
இந்த பிரச்சினை குறித்து போலீசார் விசாரணை செய்த போது அந்த பஸ்சில் பயணம் செய்த பயணிகள் கண்டக்டருக்காக 2 மணிநேரம் காத்திருந்து போலீஸ் நிலையத்தில் சாட்சி கூறினர். இதையடுத்து அந்த பஸ்சிலிருந்த பயணிகள் அனைவரும் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பிரச்சினையால் குளித்தலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.