மாணவியை கீழே இறக்கி விட்ட அரசு பஸ் கண்டக்டர் பணி இடைநீக்கம்


மாணவியை கீழே இறக்கி விட்ட அரசு பஸ் கண்டக்டர் பணி இடைநீக்கம்
x

நெல்லையில் இசைக்கருவியுடன் பஸ்சில் சென்ற மாணவியை இறக்கிவிட்ட அரசு பஸ் கண்டக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே சீதபற்பநல்லூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கலை விழா நடந்தது. இதில் அந்த கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவியான சிவகங்கையைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவர் கலந்து கொண்டார். கலை விழா முடிந்த பின்னர் மாணவி ரஞ்சிதா டிரம்ஸ் மற்றும் பறை இசைக்கருவிகளுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டார். இதற்காக அவர் நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் அரசு பஸ்சில் புறப்பட்டார்.

அப்போது பஸ் கண்டக்டர், இசைக்கருவிகள் குறித்தும் அவற்றை பஸ்சில் ஏற்றியது தொடர்பாகவும் மாணவியிடம் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் அவர் மாணவிக்கு டிக்கெட் கொடுக்க மறுத்து, அவரை வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலை பஸ் நிறுத்தத்தில் நடுவழியில் இறக்கிவிட்டு சென்றார். அதன்பின்னர் மாணவி வேறு பஸ்சில் மதுரைக்கு புறப்பட்டு சென்றார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து சம்பந்தப்பட்ட பஸ் கண்டக்டரான நெல்லை தாமிரபரணி கிளையில் பணியாற்றிய கணபதி என்பவரை திசையன்விளை கிளைக்கு இடமாற்றம் செய்தனர். தொடர்ந்து கண்டக்டர் கணபதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல பொது மேலாளர் சரவணன் பிறப்பித்துள்ளார்.


Next Story